செய்திகள்

மகாகவி பாரதியின் “ உஜ்ஜயினி” கீதம்: ஆடல் அரசி சுவாதியின் ஆத்ம-நாதம்…!

Makkal Kural Official

சென்னை, செப் 11

“கீர்வான வாணி பாரதி: மகாகவியின் மார்க்கம்” என்னும் தலைப்பில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி சுவாதி ஆத்மநாதனின் பிரத்தியேக நாட்டிய நிகழ்ச்சி (முதல் முறையாக சோலோ- தனி நடனம் ) மயிலை ஆர் ஆர் சபாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


மகாகவியின் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதியின் தெவிட்டா இசையில் நடந்த 90 நிமிடம் “ பாட்டு- பரதம்”  நிகழ்ச்சியில், அரங்கில் அமர்ந்திருந்த கலை ஆர்வலர்கள் மௌனத்தில் மலைத்து மெய்சிலிர்த்தனர் என்றால் அது மிகையல்ல.
“எதிர்காலத்தில் நாட்டிய உலகில் ஒரு ஸ்டார் -கண் எதிரில் சுவாதி ஆத்மநாதன்” என்று சபாவின் செயலாளர்- பிரபல ஆடிட்டர் நாகராஜன் பெருமிதத்தோடு குறிப்பிட்டு வாழ்த்தினார்.
“நாட்டிய உலகில் மகாகவி தொடாத பாடல்கள்”- என்ற தலைப்பில் பேராசிரியர் கே வி கிருஷ்ணன் (காசி – வாரணாசி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்) ஆய்வில் வெளிப்படுத்திய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு நாட்டிய வடிவம் கொடுத்து அற்புதமாக மேடை ஏற்றினார் சுவாதி ஆத்மநாதன்.
அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்னும் கருப்பொருளுடன் பாரதியின்  பாடலை முதல் பாடலாக எடுத்து அழகாக அலாரிப்பில் படம் பிடித்துக் காட்டினார் சுவாதி. அடுத்து வந்த பாடல்“ பரம் பொருள் ஒன்றே…” .

ஒன்றே குலம் -ஒருவனே தேவன்

இந்து- இஸ்லாம்- கிறித்துவம் என்று தனித்தனியாக மதங்கள் இருந்தாலும் அனைத்தின் பரம்பொருளும் ஒன்றே என்பதை சுட்டிக் காட்டும் விதத்தில், நமக்கு வழிகாட்டி விழி திறக்கும் உணர்வு பூர்வமான பாடலுக்கு ஆடினார்.


( இந்துக்கள் கைகூப்பி, கன்னத்தில் போட்டு பிரார்த்தனை செய்வதையும், இஸ்லாமியர்கள் மண்டியிட்டு இரு கை விரித்து மேலே உயர்த்தி தொழுவதையும், கிறிஸ்தவர்கள் வலது கையால் இடது வலது தோள்பட்டையை தொட்டு சிலுவையிட்டு பிரார்த்தனை செய்வதையும் காட்டிய முத்திரையில்… முக பாவனையில்… சுவாதி, ச்ச்சோ  ஸ்வீட், ச்ச்சான்சே இல்லை…. இன்னமும் கண்கள் மறக்கவில்லையே…?!)
மூன்றாவதாக வர்ணத்துக்கு பதில்,“உஜ்ஜயினி… நித்திய கல்யாணி, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்”  (கிருதி) என்னும் பாடலை எடுத்துக்கொண்டு ஆடினார் சுவாதி. கர்நாடக இசையோடு ஹிந்துஸ்தானி இசையையும் கலந்து,  “பான் இந்தியா” இசையை காதில் ஒலிக்கச் செய்து புதியதோர் சுகானு பாவத்தை ஊட்டினார். சரணத்தில் இந்துஸ்தான் டச், அது போலவே அங்க அசைவில் கதக் டச்… சலங்கை ஒலிக்கு இணையான பாதங்களின் அசைவும் ஆட்டமும்… நெஞ்சம் மறப்பதில்லை, அது தன் நினைவை இழப்பதில்லை என்னும் நிலைதான்!
அவளே உமா மகேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி
இந்தப் பூவுலகில் அனைவரின்  உய்விற்கு காரணமானவள் அன்னை. அவள் சங்கரனின் தேவி. அவளே உமாவாகவும் சரஸ்வதி ஆகவும் லட்சுமி ஆகவும் இருக்கிறாள். அவள் திருவடிகளை வணங்குவோம். கலியுகம் இந்த உலகத்தில் இருந்து நீங்கி மீண்டும் சத்ய யுகம் வருவதற்கு உரிய வழியை நம் மனதில் நிலை நிறுத்தி அந்த வழியில் நாம் செல்லும் திறத்தை நமக்கு அருள் செய்யும் உத்தமி நம் உஜ்ஜயினி நித்திய கல்யாணி… ” என்று விளக்கிடும் வகையில் சங்கரனையும், சக்திகளையும் அவர் காட்டிய விதத்தில் பசு மரத்தாணி போல் மனதில் பதிந்திட… சுவாதி, திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். என்னமாய் முத்திரை, பாவங்கள்?! (விழி மூடினாலும் முன்வந்து நிற்கிறதே- அன்னையாய், சுவாதியாய்?!)
தொடர்ந்தது,“நின்னை சரணடைந்தேன்…” (இசைஞானி இளையராஜா  “பாரதி ”படத்தில் பயன்படுத்திய பாடல்)
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம், பெண் விடுதலை வேண்டும் -இது பாரதியின் கனவு. வீட்டுக்குள் பெண்களை பூட்டி வைத்துவிடும் நிலை கண்டு கொதிக்கும் உணர்வில் வடிவமைக்கப்பட்ட பாடலில்… சுவாதியின் ஆக்ரோஷம், கோபக் கனல் வீசும் அந்த அக்னிப் பார்வை… என்ன சொல்ல?!.
( அன்பு, கனிவு, கோபம்- தாபம், சிரிப்பு, உருக்கம்..).
குரு சமர்ப்பணம்
நிறைவாக ”வைய்யமெல்லாம் நீ நிறைந்தாய்… மாதா பராசக்தி” பாடல்.  நாட்டிய மேதை, குரு பேராசிரியர் சி வி சந்திரசேகருக்கு குரு சமர்ப்பணம். தில்லானா, குருவின் நாட்டிய வடிவமைப்பில் நெஞ்சம் நிறைந்தார் சுவாதி.( வார்த்தை வார்த்தை சந்திரசேகர் மாமா என்று நெகிழ்ச்சியோடு உச்சரிக்கிறார்- என்ன ஒரு குரு பக்தி?!)
இசையாக்கம்: ராஜ்குமார் பாரதி, நட்டு வாங்கம்- வாய்ப்பாட்டு சுவாதி ஆத்மநாதன், மிருதங்கம்- தாள வாத்திய இசை கார்த்திக், வயலின் டிவி சுகன்யா, புல்லாங்குழல் சுஜித். திரை மறைவில் நால்வர் கூட்டணியில் -செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…. மகா கவியின் வரிகளை இரவல் வாங்க வேண்டும், இங்கே. (தித்திக்கும் தெவிட்டா இசை)
சுவாதியின் பிறந்தநாள் நேற்று முன்தினம் (9 ம் தேதி). அதற்கு வாழ்த்து கூறியபடியே மேடை ஏறிய ராஜ்குமார் பாரதி,“மகாகவி பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் மரணம் அடைந்த பிறகு, பாரதியை காசிக்கு அழைத்து போய், அவரின் வாழ்க்கையை திசை திருப்பியவர்  அத்தை குப்பம்மாள். அவரின் பேரன் பேராசிரியர் கிருஷ்ணனின் பேத்தி சுவாதி ஆத்மநாதன், அதாவது பாரதிக்கு கொள்ளுப் பேத்தி..” என்று உறவு முறையை குறிப்பிட்டு பேச்சைத் துவக்கினார்.
கிருஷ்ணன் சங்கீத ஞானம் மிக்கவர், மிருதங்கம் வாசிப்பவர். அவருடைய கலை ரத்தம் அப்படியே சுவாதி உடம்பில் ஊறி இருக்கிறது. கடமையில் அர்ப்பணிப்பு, பக்தி சிரத்தை இரண்டும் சுவாதியின் இரு கண்களாக கொண்டிருக்கிறாள். எதிர்காலத்தில் பிரகாசமாக ஒளி விடுவாள் இந்த கலை உலகில். பாட்டும் பரதமும் இரண்டும் அவருக்கு கைவந்த கலையாகி இருக்கிறது. தேசபக்தி- தெய்வ பக்தி இரண்டிலும் கொள்ளு தாத்தாவைப் போல. வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்று நெஞ்சோடு அணைத்து ஆத்மார்த்தமாக வாழ்த்தினார் ராஜ்குமார்.

நிருத்ய கலா ரத்னா சி வி சந்திரசேகர்

சர்வேஷ் கார்த்திக் – கெட்டிக்கார பையன், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று கேள்வி எழுப்பி தந்தை கார்த்திக் வழியில் அவரும் வெல்வார் என்று ஆசீர்வதித்தார்.
96 ஆண்டுகால ஆர் ஆர் சபா வரலாற்றில் முதல் முதலாக “நிருத்திய கலா ரத்னா” என்னும் பட்டமும், ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசும்,
சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் பேராசிரியர் -நடன மேதை சி வி சந்திரசேகர். அவருக்கு பேர் சொல்லும் சிஷ்யைதான் சுவாதி. எதிர்காலத்தில் நாட்டிய உலகில் நட்சத்திரம் (ஸ்டார்) என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டு வாழ்த்தினார் ஆர் ஆர் சபாவின் செயலாளர்- பிரபல ஆடிட்டர் நாகராஜன்.
நவரசம் காட்டிய சுவாதி, கோபாவேசத்தில்- வெகுண்டெழுந்து  காட்டிய பாவங்கள் (பெண் அடிமை விடுதலை) சிலிர்க்க வைக்கும், எப்படி இப்படி ஒரு சாத்திய திறமை என்று சிந்திக்க வைக்கும்? எல்லாம் குருவிடம் இருந்து வந்த சீரிய பயிற்சி என்று மனம் திறந்து பாராட்டினார்.
முகம்மது இப்ராஹிம் கலீல் (ஐ சி சி ஆர் அமைப்பின் கலாச்சார மையத்தின் முன்னாள் இயக்குனர்), கிருஷ்ண சாமி (கேந்திரிய வித்யாலயா, கேவி ஐலேண்ட் கிளை பிரின்ஸ்பல்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உஜ்ஜயினி என்றால் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுபவள், மீண்டும் மீண்டும் வெற்றி தருபவள்என்று பொருள். இது சுவாதிக்குப் பொருந்தும்.
இதே போல நித்திய கல்யாணி என்றால் என்றைக்கும் மங்கள வடிவாக இருப்பவள், என்றைக்கும் மங்களத்தை தருபவள் என்று பொருள். இதுவும் சுவாதிக்குப் பொருந்தும்.
மகாகவி பாரதியின் தொலைநோக்குப் பார்வை- அவரது சிந்தனையில் மலர்ந்த எழுச்சி- உத்வேகம் ஊட்டும் பாடல்களுக்கு- ஊருக்கு ஒரு மார்க்கம் என்றால் சுவாதிக்கு  தனி மார்க்கம்.

மகாகவி பாரதியின் “ உஜ்ஜயினி” கீதம்:
ஆடல் அரசி சுவாதியின் ஆத்ம-நாதம்…!


வீ ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *