நாடும் நடப்பும்

மகளிர் முன்னேற்றம் கண்டு தமிழகம் சாதிக்கிறது: ஜெயலலிதா வழியில் அண்ணா தி.மு.க.வின் நல்லாட்சி பாரீர்

உலகெங்கும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்தது. அனைத்து கல்விக் கூடங்கள், அலுவலகங்கள், அரசியல் கட்சிப் பணிகள், அரசு செயல்பாடுகள், போக்குவரத்து, சுற்றுலாத்துறை என பல்வேறு துறைகள் ஸ்தம்பித்து நின்றது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு மெல்ல சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. பணிகளுக்குத் திரும்ப அழைப்பு வந்த நாள் முதலாய் பெருவாரியான பெண்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கட்டும் என்ற மனப்போக்கு வெளிப்பட்டது.

இது நல்லதா? என்ற கேள்வியை விட, விடை தேட வேண்டியது மகளிர் பங்களிப்பை எல்லா பணிகளிலும் அதிகரிப்பது எப்படி? என்பதற்குத்தான்.

பல பின்தங்கிய பகுதிகளில் பள்ளிக்குச் செல்லா சிறுவர், -சிறுமியர் வீட்டு வேலைகளுக்கும், கட்டிடத் துறையில் செங்கல் சுமக்கவும் துவங்கி விட்டனர். வீடியோ வகுப்புகள் நடைபெற்றாலும் கிராம பகுதி மாணவர்களின் உலகெங்கும் பரிதாபத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மீண்டும் வளாகம் வந்து படித்தாக வேண்டிய நிலை வந்துவிட்டாலும் பல நாடுகளில் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரட்டும், மாணவியர் தற்போது வேண்டாம் என்று கூறி வருவது அவர்கள் பாதுகாப்புக்காக இருப்பது போல் தோன்றுகிறது.

ஆனால் அவர்களது வருங்கால கனவுகள் நனவாகுமா? கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கல்விக்கூடங்களுக்கும் போகாத நிலையில் படிப்பின் மீது பிடிமானமின்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் ஆர்வத்துடன் படிக்க வைத்தாக வேண்டும். அந்த முனைப்பு ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கடமையாகும். அந்தப் பணியில் மகளிர் பங்களிப்பு இருந்தால் ஆண் – பெண் பாகுபாடின்றி எல்லோரையும் ஊக்கப்படுத்தி படிக்க வைப்பார்கள். அதில் தவறிவிட்டால் கல்வி மறுமலர்ச்சியில் பெண்கள் பின்தங்கி விடும் அபாயம் உள்ளது.

ஐ.நா. சபை தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் கூட இப்பிரச்சினை பற்றி கருத்து கூறி வருகிறார்கள்.

அவர்கள் கூறுவது எல்லாப் பொறுப்புகளிலும் சமத்துவமான பார்வையுடன் பணிநிமித்தம் செய்தாக வேண்டும் என்பதே ஆகும்.

ஐ.நா. சபையின் மற்றொரு பிரதான அச்சம் சுமார் உலகெங்கும் ஒரு கோடி சிறுமிகள் மீண்டும் கல்விக்கூடங்களுக்கு திரும்ப மாட்டார்கள் என்று அஞ்சுகிறார்கள். மேலும் உலகளாவிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு பெண்களின் முன்னேற்றமும், வருமானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கப் போகிறது.

ஆகவே பணியில் சேர்ப்பது, சம்பளம் தருவது போன்று எல்லா அம்சங்களிலும் பெண்களுக்கு உரிய சம அந்தஸ்தை தர வேண்டும் என்று ஐ.நா. ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்குகையில் முன்னணி கட்சிகளின் நிலைப்பாட்டை அவர்களது தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது அல்லவா, அதில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அண்ணா தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, வளரும் அரசியல் கட்சியாக இருக்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம், அண்ணா திமுகவிலிருந்து பிளவுபட்டு தற்போது டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரும் உறுதிகளை உற்றுப் பார்ப்போம்.

எது எப்படியோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் மகளீர் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது.

மகளீர் காவல் நிலையங்கள், மகப்பேறு காலத்தில் இலவச மருத்துவ வசதிகள், ஆரோக்கியமான குழந்தை பிறப்பு மற்றும் தொட்டில் குழந்தை திட்டத்தின் பயனாக பெண் குழந்தைகளை குப்பை தொட்டியில் வீசி விடுவதையும் தடுத்தது என பெரிய பட்டியல் தற்போதும் நடைமுறையில் இருப்பதை காண்கிறோம்.

தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் பெண்கள் பொருளாதார ரீதியாய் வல்லமை பெற சுயஉதவிக் குழுக்கள் என்ற புரட்சியையும் உருவாக்கினார்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று மகளிரின் மேன்மையை கொண்டாடும் தமிழகத்தில் பெண்களை பெரிதும் மதித்து அவர்கள் வளர்ச்சிக்கு வித்திட்டு உறுதுணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தேர்தல் அறிக்கைகளில் எல்லா பிரதான கட்சிகளும் தந்திருக்கும் உறுதிகளை பார்க்கும் போது வாக்காளர்கள் எதை மனதில் கொண்டு வாக்களிப்பு நாளில் முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்பதை தேர்தல் முடிவுகள் தான் சுட்டிக்காட்டும். ஆனால் அண்ணா தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டு தொடர் ஆட்சியில் பெண்கள் நலன் போற்றப்பட்டது, தமிழகம் பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலம் என்று உலகமே பாராட்டியது. மிக அதிக பெண் தொழில் அதிபர்களை உருவாக்கிய பெருமையையும் தமிழகம் கண்டது, அதை உறுதிப்படுத்தியது ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு. அவர் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மகளீர் மேம்பாடே தமிழகத்திற்கு மதிப்பூட்டல் என்ற சிந்தனையோடு பெண்கள் வளர்ச்சிக்கு பல உறுதிகளை அவர்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அண்ணா தி.மு.க.வின் பெண்களை போற்றுவோம், நாட்டை முன்னேற்றுவோம் என்ற கோட்பாடு நிச்சயம் வெற்றி தாரக மந்திரமாகும்!

அண்ணா திமுக: ஜெயலலிதா வழியில் மகளிர் நலத்திட்டங்கள் தொடரும்

* சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும்.

* நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணச்சலுகை வழங்கப்படும்.

* பெண்களின் பணிச்சுமையை போக்க, குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின்.

* அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு, இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும்.

* திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கத்துடன் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.50,000 நிதி ரூ.60 ஆயிரமாக வழங்கப்படும். அதேபோல், பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 1 ஆண்டாக உயர்த்தப்படும்.

* மகப்பேறு நிதி உதவி ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வைப்பு நிதி, ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் செயலி, சென்னை மட்டுமல்லாது, அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு, நியாயமான வட்டியில் கடன் வழங்க, மகளிர் வங்கி உருவாக்கப்படும்.

* அரசு வேலையில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

* இளைஞர், இளம் பெண்கள் தொழில் தொடங்க, குறைந்த வட்டியில் மானியத்துடன் மென் கடன் (Start-Up Loan) வழங்கப்படும்.

திமுக: பெண்கள் நலனில் புது அக்கறை

* அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் ஆக்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.

* மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.

* சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடி தேடி மருத்துவ வசதி வரும்.

* கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

* 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.

* குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

* பணிபுரியும் மகளிர் நலனுக்காக, மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 1 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு விவசாயம் சார்ந்த சிறுதொழில்கள், வணிகம் செய்வதற்கு வட்டியில்லா கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

* கைம்பெண்களின் முன்னேற்றத்திற்காக, கைம்பெண் மகளிர் நலவாரியம் அமைக்கப்படும்.

* பெண்களை அதிகம் பாதிக்கும் வாய்ப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கு, உரிய உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

* ஆதரவற்ற பெண்கள் 10 பேர் இணைந்து தொடங்கும் ஆடு, கோழி வளர்ப்பு பண்ணைகளுக்கு ரூ.30 சதவீத மானியம் வழங்படும்.

* 12 ஆம் வகுப்பு முடித்த கிராமப்புற மகளிரைக் கொண்டு, கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம், மலர்த்தோட்டம், மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, பாய்–கூடை முடைதல், மண்பாண்டம் செய்தல், கறிக்கோழி வளர்த்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு ரூ.25 சதவீத மானியம் வழங்கப்படும்.

* அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள், தானியங்கி எந்திரங்கள் மூலம் வழங்கப்படும்.

மக்கள் நீதி மய்யம் : மகளிர் வங்கிகள், விடுதிகள்

* மாவட்ட அளவில் மகளிரே இயக்கும் மகளிர் வங்கிகள் செயல்படுத்தப்படும்.

* துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இலவசமாக தங்க, அவசர கால மகளிர் விடுதிகள் துவக்கப்படும்.

* பெண்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை, இலவச ஆரோக்கிய மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை செய்யப்படும்.

* அரசு சீருடை துறையில், பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் உறுதி செய்யப்படும்.

* வீட்டு வேலை மட்டுமே செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் மதிப்பு உரிமைத் தொகை வழங்கப்படும்.

அமமுக : பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி

* 6 ஆம் வகுப்பு தொடங்கி கல்லூரி இளநிலை படிப்பு வரையில், கல்வி வளாகத்திலேயே ஆண்டுக்கு 2 முறை, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் பிரத்யேகமாக செய்யப்படும்.

* சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் சிறப்பு விடுப்பு மாதந்தோறும் வழங்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண்குழந்தைக்கு ரூ.50,000 வைப்பு நிதி செலுத்தப்படும்.

* 6–ம் வகுப்புத் தொடங்கி முதுகலை வரையில் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *