புதுடெல்லி, மார்ச் 7–
நாளை மார்ச் 8ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் மகளிர் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர். இது குஜராத்தில் மகளிர் தினத்தை ஒட்டிய சிறப்பு ஏற்பாடாகக் கருதப்படுகிறது.
நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தனது சமூக வலைதள கணக்குகளை பிரதமர் மோடி பெண்களிடம் ஒப்படைக்க உள்ளார். அன்றைய தினம் பெண்கள் பிரதமரின் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரியில் அம்மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணியில் முழுக்க, முழுக்கப் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் பின்னணியில் நாளை, ‘மார்ச் 8’ சர்வதேச மகளிர் தினம் காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க. ஆளும் குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறும்போது, “சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நவ்சாரியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் பாதுகாப்புப் பணியில் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது மாதிரியான ஏற்பாடு இந்திய வரலாற்றில் முதல் முயற்சி ஆகும்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் போலீசார் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்து வருகிறது.
பிரதமர் மோடி நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை பெண்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,100 கான்ஸ்டபிள்கள், 187 சப்?இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளில், 16 துணை போலீஸ் காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியும் இடம்பெற உள்ளானர்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் இவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, குஜராத்தின் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான நிபுனா டோரவனேவிடம் அளிக்கப்பட்டுள்ளது.