இ–சேவை மையத்தில் 19–ந்தேதி விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப். 16–
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் முதல் கட்டமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் சென்றதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் 55 லட்சம் பெண்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. என்ன காரணத்திற்காக அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தகுதி இருந்தும் சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி இ–சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் வாய்ப்பு
இதுகுறித்து இத்திட்டத்தின் செயலாக்க அதிகாரி இளம்பகவத் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பணம் கிடைக்காத தகுதி உடையவர்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விண்ணப்பம் நிராகரிப்பு குறித்த எஸ்.எம்.எஸ். வந்தவுடன் தங்கள் பகுதியில் உள்ள இ–சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதனை அதிகாரிகள் கள ஆய்வு செய்து இத்திட்டத்தில் சேர்ப்பார்கள். இது தவிர தகுதி இருந்தும் முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும். மேலும் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அனைவருக்கும் படிப்படியாக இவை வழங்கப்படும். ஏற்கனவே வங்கி ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூடுதலாக இந்த கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.