செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை: புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும்

Makkal Kural Official

சட்டசபையில் அமைச்சர் உதயநிதி உறுதி

சென்னை, ஜன. 8–

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்தால், தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1 கோடி பேருக்கும் கூடுதலான பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டது, அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

மேலும் முதல்முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.கடந்த டிசம்பர் மாதம் 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் முதல்வருக்கு கொண்டு சென்றுள்ளோம். 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம். திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *