செய்திகள்

‘‘மகளிர் உடல் நலம் பேணும் மருத்துவ பரிசோதனை ’’ : மருத்துவர் நந்தினி ஏழுமலை வலியுறுத்தல்

சென்னை, ஜன.8–

முறையான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட சுகாதாரமான பழக்க வழக்கங்களுக்கு ஒவ்வொரு பெண்ணும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று வடபழனி போர்டிஸ் மருத்துவமனை டாக்டர் நந்தினி ஏழுமலை தெரிவித்தார்.

ஒரு தலைமுறைக்கு முன்பு மக்கள் உடல்நலம் சரியில்லாமல் போனால் அல்லது இறக்கும் தறுவாயில் மட்டுமே மருத்துவர்களைப் பார்ப்பார்கள். ஆனால் தங்களது சுகாதாரம் குறித்த கல்வியறிவும், விழிப்புணர்வும், மக்களிடையே இப்போது அதிகரித்திருப்பதால், நோய் தடுப்பு மருத்துவ பாதுகாப்பு பொது மக்களிடையே இன்றைக்குப் பரவலாகக் காணப்படுகிறது. எனவே உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, மருத்துவர்களான நாங்கள், தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு நோயாளிகளைக் கேட்டுக் கொள்கிறோம். சரியான சிகிச்சையை விரைந்து எடுக்கவும், சிக்கல்களைத் தவிர்க்கவும், பரிசோதனைகள் மூலம் நோயைத் தொடக்கத்தில் கண்டறிவதே சிறந்தது.

மார்பகப் புற்றுநோய் இருப்பதைப் பரிசோதனை மூலம் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டதால், மார்பை அகற்ற வேண்டிய அவசியமிருக்காது.

புற்றுநோய்களுள், கருப்பைவாய் புற்றுநோய் மட்டுமே வீரியமற்ற நிலையிலிருந்து வீரிய நிலைக்குச் செல்லச் சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. சரியான இடைவெளியில் தாம்பத்திய உறவில் / உடலுறவில் ஈடுபடும் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பேப் ஸ்மியர் பரிசோதனை தவறாமல் செய்து கொளும் பட்சத்தில் எளிதான வீக்கம், ஹெச்பிவி தொற்று, புற்றுநோய்க்கு முந்திய நிலை உள்பட அனைத்தையும் கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்கலாம்.தடுப்பு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான முக்கிய நோக்கம் தடுக்கப்படத்தக்க பெரிய நோய்ப் பாதிப்பிலிருந்து பாரத்தைக் குறைப்பதே ஆகும். மருத்துவ வரலாறு / உடல் பரிசோதனை மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளில் ஒரு பகுதியாகும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் நோய்த் தடுப்பு அவசியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பரிசோதனைகள் முக்கியமாகும். எலும்பு நலிவு நோய் உள்ளிட்ட எலும்பு தாது அடர்த்தி, புற்றுநோய், இதய நோய் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளைத் தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கவும், இன்னும் சிறப்பான சிகிச்சையை அளிக்கவும் உதவும்.

இளம் பெண்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கண், பல், பெருங்குடல் பரிசோதனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பை, குழாய்கள் மற்றும் சினைப்பைகள் பற்றித் தெரிந்து கொள்ள:–

மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இடுப்புக்கான அல்ட்ரா சவுண்ட் அல்லது கருப்பைக்கான ஸ்கேன் ஆகியவை மூலம் நார்த்திசுக் கட்டி கருப்பை, கருப்பை சவ்வு, புற்றுநோய், சினைப்பை நீர்க்கட்டி ஆகியவற்றை தொடக்கத்திலேயே பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்.

இவ்வாறு டாக்டர் நந்தினி ஏழுமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *