செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் கட்சியினுடையது: சோனியா காந்தி கருத்து

புதுடெல்லி, செப். 19–

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சோனியா காந்தி வந்தார். அப்போது, அவரிடம் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோனியா காந்தி “மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது” என்றார்.

முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தினை நாங்கள் வரவேற்கிறோம். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருக்கிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்து இந்த திரைமறைவு அரசியலுக்கு பதிலாக ஒருமித்த கருத்தை எட்டியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினால் அது காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைந்த வெற்றி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு வேளை மோடியால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், அநேகமாக அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தது ஏன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

ஒருவேளை 2024 மக்களவைத் தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ஓபிசி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காமல் போனால் 2024ல் பாஜக உத்தரப் பிரதேசத்திலும் தோல்வியடையும். இதுகுறித்து யோசித்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *