தென்காசி, ஜூலை 26–
மகளிர் அணி போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியிடம் வாக்குவாதம் செய்த, தென்காசி திமுக மாவட்ட செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் பழங்குடி இனப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் நிகழ்வுகளை கண்டித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் மகளிர் அணி போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்திருந்தார்.
திமுக மாவட்ட செயலர் நீக்கம்
இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் மகளிர் அணி போராட்டம் சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதனையடுத்து அடுத்த நாளான திங்கள் கிழமை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மகளிர் அணியினர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தென்காசியில் நடைபெற்ற திமுக மகளிரணி போராட்டத்தின் போது, ஊராட்சி மன்ற தலைவியுடன் திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.