பெங்களூரு, ஜூன் 3–
கர்நாடகாவில் அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பால், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, சங்க செயலர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அரசு பஸ்களில் 11 ந்தேதி முதல் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்று, கர்நாடக அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், கர்நாடகா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இலவச பயணத்தை தனியார் பஸ்களுக்கும், நீட்டிக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை வைக்க முடிவு எடுத்தனர்.
தனியாருக்கும் நீட்டிக்க வேண்டும்
இது குறித்து, தனியார் பஸ்கள் உரிமையாளர்கள் சங்க செயலர் கோவிந்தராஜ் கூறும்போது, கர்நாடகாவில் 3,500 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 45 சதவீத மகளிர் பயணம் செய்கின்றனர். அரசு பஸ்களில் இலவச பயணம் என்ற அறிவிப்பால், தனியார் பஸ்களில் இனி பெண் பயணியர், வருகை குறைந்து விடும். ஆண் பயணியரை மட்டும் நம்பி, பஸ்களை இயக்க வேண்டி வரும்.
அரசின் அறிவிப்பு மூலம், ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 50 ஆயிரம் ரூபாய், சாலை வரியாக செலுத்துகிறோம். தனியார் பஸ்களை நம்பி, மூன்று லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இதனால் இலவச பயணத்தை தனியார் பஸ்களுக்கும் நீட்டித்து, எங்களுக்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கூறி உள்ளார்.