சிதம்பரத்திற்கு அவ்வளவு அவமானமாக இருந்தது. ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் கூனிக் குறுகித் தான் சாப்பிடுவார். மறு சோறு கேட்க வேண்டும் என்றோ ? அடுத்த தடவை குழம்பு வேண்டும் என்றோ ? அவருக்கு கேட்பதற்கு கூச்சம். அங்குமிங்கும் திரும்பிக் கொண்டு பிசைந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார் .
” ஏதாவது வேணுமாப்பா “
என்று மகன் தினேஷ கேட்டால் மட்டுமே சிதம்பரம் வாய் திறந்து பேசுவார்.
“ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடுப்பா ,ஏன் உம்முன்னு இருக்க? “
என்று அவன் சொல்லும்போதே அதில் கோபம் தொக்கி நிற்கும் .
” இல்லப்பா போதும்னு தான் கேக்காம இருந்தேன் “
என்று சொல்லும்போதே சிதம்பரத்தின் நா தழுதழுக்கும்
” இங்க பாருங்க எதா இருந்தாலும் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க. அப்புறம் உங்க பையன் கிட்ட மருமக சாப்பாடு போட மாட்டேங்குறா அப்படி இப்படின்னு என்னைய பத்த வச்சிட்டீங்கன்னா அது குடும்பத்துக்கு சரியா வராது. உங்களுக்கு என்ன வேணுமோ அத கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது உங்க பொறுப்பு “
என்று மருமகள் சாந்தி சொல்லும், அந்த வார்த்தைக்குள் ஒரு சூட்சுமம் இருப்பதை அறிந்து கொள்வார் சிதம்பரம் .
“சரி” என்று தலை ஆட்டுவாரே தவிர வாய் திறந்து பேசவே மாட்டார். காலை, மாலை, இரவு என்று ஒவ்வொரு முறை சாப்பிடும் போது அவருக்குப் பெருத்த அவமானமாக இருக்கும் .அதுவும் மருமகள் பேரக்குழந்தைகள் மகன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிட முடியும். அதுவும் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டும் ,அரட்டை அடித்துக் கொண்டும் அவர்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ? அப்போதுதான் சிதம்பரத்திற்கு சாப்பாடு கிடைக்கும். தன்னிச்சையாக அவரால் சாப்பிட முடியாது .ஒருவேளை அவருக்கு பசியாக இருக்கிறது என்றால் காலாற வெளியே போய் டீ ,வடை ஏதாவது சாப்பிட்டு வந்துவிடுவார். தவறியும் கூட வீட்டில் எதுவும் கேட்க மாட்டார் .
இந்த வாழ்க்கை எதற்கு? மனைவி போன பிறகு நாம் தனியாக இருந்திருக்க வேண்டியதுதானே? ஒத்த மகன் என்று அவன் குடும்பத்தோடு இருப்பது எவ்வளவு அவமானமாக இருக்கிறது? ஒருவேளை சாப்பிடுவதற்கு நம் மனம் இவ்வளவு கூனிக் குறுகுகிறதே எதற்கு? என்று இரவெல்லாம் வருத்தப்பட்டு அழுது கொண்டிருப்பார் சிதம்பரம்.
நான் பெத்த மகன், அதுவும் ஒரே பிள்ளை. அவன் நம் வீட்டில மகனாக இருந்தபோது, நான் சம்பாதிச்ச பணத்தில் படிச்சான். நான் சம்பாதிச்ச பணத்தில அவன் திருமணம் முடிச்சான். இது நம் மகனுக்கு உறுத்தலையே ? நம்ம மகன் இன்னொரு பெண்ணை கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னால நம்ம வீட்டில தானே இருந்தான். நான் சம்பாதிச்சதத் தானே சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். இப்ப வேலைக்கு பாேறான். கை நிறைய சம்பாதிக்கிறான். கல்யாணமும் செஞ்சுட்டான் அவனுக்கு குழந்தைகளும் வந்துருச்சு. ஆனா, நாம சம்பாதிச்சு போது ,அவன் எந்த வெட்கம் ,அவமானம், மானம் இல்லாம சாப்பிட்டான். ஆனா, நான் அவன் வீட்டில் ஒவ்வொரு நாளும் அவமானப்பட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன் ஏன் எனக்கு இது வருது.
என்று ரொம்பவே சிந்தித்தார் சிதம்பரம். அந்த இரவு அவரால் தூங்கவே முடியவில்லை. ஒரு தகப்பன் சம்பாதித்து மகன் சாப்பிடுவது என்பது வேறு .மகன் சம்பாதித்து தகப்பன் சாப்பிடுவது என்பது வேறு .இப்போது நாம் சம்பாதிக்கவில்லை மகன் சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறோம்.அதுதான் நமக்கு கூனிக் குறுகுகிறது மனது “
என்று அந்த இரவெல்லாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.
மறுநாள் காலை சிதம்பரம் வீட்டில் இல்லை .
“அப்பா …அப்பா… என்று வீட்டில் தேடிப் பார்த்தான் தினேஷ். அவர் எங்கும் தென்படவில்லை .
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரே மகனின் செல்போனுக்கு போன் செய்திருந்தார் சிதம்பம்
” தினேஷ் நான் இனிமே உங்க வீட்ல இருக்க போறதில்ல உங்களுடைய சம்பாத்தியத்தில உக்காந்து சாப்பிடுறதுக்கு எனக்கு மனசு வருத்தப்படுது. என் சம்பாத்தியத்தில நீங்க உட்காந்து சாப்பிடலாம். அது எனக்கு இருக்கிற மரியாதை. உங்க சம்பாத்தியத்தில நான் சாப்பிடுறது எனக்கு அவமானம். நான் இனிமே தனியாகத்தான் இருக்கப்போறேன். முடிஞ்சா குடும்பத்தோட நீ இங்க வந்து நான் சம்பாதிக்கிற சம்பாத்தியத்தில சாப்பிட்டுட்டு குடும்பம் நடத்து. அதுதான் எனக்கு மரியாதை “
என்று சொல்லி போனை கட் செய்தார் சிதம்பரம். அவர் பேசிய பேச்சு தினேஷை என்னவோ செய்தது. சிதம்பரத்தைத் தேடி ஓடினான், தினேஷ்.