செய்திகள்

மகன் கண் முன் நிகழ்ந்த சோகம்; அறுந்து தொங்கிய மின்சார வயர் உரசி கணவன் – மனைவி பலி

மதுரை, மே 11–

மதுரையில் அறுந்து தொங்கிய மின்சார வயர் உரசி இருச்சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னால் சைக்கிளில் சென்ற 12 வயது மகன் கண் முன்னாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மதுரை மாநகர் டிவிஎஸ் நகர் துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்த முருகேசன் (50), மனைவி பாப்பாத்தி (44) தம்பதியினர் பலசரக்கு கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளனர். அவர்களது மகன் சைக்கிளில் முன்னே சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்து பெற்றோர்கள் பைக்கில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சென்ற பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்த காரணமாக மின்சார வயர் அறுந்து தொங்கியபடி இருந்துள்ளது. இதனை முன்னால் சைக்கிளில் சென்ற மகன் மின்கம்பி அறுந்து தொடங்கியதை பார்த்து அது குறித்து பெற்றோரிடம் கூறுவதற்காக கொஞ்சம் தூரம் சென்று திரும்பி பார்த்தான். அதற்குள் மின்கம்பியை கவனிக்காத பெற்றோர் பைக்கில் வந்தபோது கணவன் மனைவி இருவர் மீது மின்சார வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் சென்றபோது இருவரும் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விபத்து நடைபெற்ற பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை என பலமுறை புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்தப் பகுதி முழுவதிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மின்சார வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *