தோல்விகளை யாராவது மகத்தானது என்பார்களா! வெற்றியைத்தானே மகத்தான வெற்றி என்று குறிப்பிடுவார்கள். இந்த மாதிரி தோல்விச் சம்பவங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கின்றது.
அவன் பெயர் கிருஷ்ணன். சற்று வெளிறிய நிறம். வலுவில்லாத தேகம். அதனால் அவனை அவன் பெற்றார்கள் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அவனுக்கு பசி என்றால் என்னவென்றே தெரியாது. டாண் டாண் என்று அவனுக்கு அவன் அம்மா உணவு கொடுத்து விடுவாள். எவ்வளவு உடல்நலம் சரியில்லா விட்டாலும் வீட்டிலேயே குளிக்கத் தண்ணீர் கிணற்றில் இரைத்து கொண்டு வருவார். அவன் வெளி உலகமே தெரியாமல் வளர்ந்து வந்தான். நண்பர்களும் ஓரிருவர் மட்டுமே கடைசிவரை இருந்தார்கள்.
பள்ளிக்கூடம், வீடு இதைத் தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. படிப்பில் முதல் மாணவனாகவே திகழ்ந்தான். எஸ்.எஸ்.எல்.சி.யிலும் முதல் மாணவனாகவே தேர்ச்சி பெற்றான்.
தலைமை ஆசிரியர் மிகவும் உதவிகளைச் செய்தார். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. மேல் படிப்புக்கு கிருஷ்ணன் மிகவும் ஆசைப்பட்டான். ஆனாலும் வசதியில்லாத சூழ்நிலை. குறிப்பாக பெளதீகம் எடுத்துப் படிக்க ஆசை பட்டான். தந்தைக்கும் மேல்படிப்புக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். கடைசியில் ஒரு உறவின்முறையினர் உதவி செய்வதாகச் சொன்னார்கள். காலதாமதமாக இருந்ததால் கிருஷ்ணன் ஆசைப்பட்ட பாடப்பகுதி கிடைக்கவில்லை. தாமதமானதால் பல பாடங்கள் நடத்தப்பட்டு விட்டது.அதனால் காலேஜ் படிப்பில் தேற முடியவில்லை. இது பெரிய தோல்வியாக கருதப்பட்டது.
எது எப்படி இருந்தாலும் வாசகசாலைக்கு போய் படிப்பை மட்டும் நிறுத்தாமல் தன் பொது அறிவை வளர்த்துக் கொண்டான். வசந்தம் என்ற பத்திரிகையை விரும்பிப் படித்தான். அதன் ஆசிரியர் பெயர் வசந்தன்.
வேலைக்குச் செல்ல நினைத்தான். சில லாரி சர்வீசுகளில் சேர்ந்தான். ஒன்றும் ஒத்து போகவில்லை. வேலையும் புரிபடவில்லை. ஒரு பெரிய மொத்த பலசரக்கு கடையில் சேர்க்கப்பட்டான். முதலாளி கடலைப் பருப்பை எடுத்து வா என்றால் துவரம் பருப்பை எடுத்து வருவான். எது எந்தப் பருப்பு என்றே புரியவில்லை. முதலாளியே உன்னை வைத்து வேலை என்னால் வாங்க முடியாது என்று கூறி பணியிலிருந்து நீக்கி விட்டார். அது பெரிய தோல்வி தான்.
ஒரு தடவை ஊரிலிருந்து வந்த தாய் மாமா தன் சகோதரியைப் பார்த்து ‘‘உன் மகன் பெரிய உதவாக்கரையாக இருக்கிறானே என்றார். எந்த வேலையிலும் நிலைக்க மாட்டான் என்றார். தாயும் தந்தையும் இந்த வார்த்தைகளை கேட்டு சகித்துக் கொண்டார்கள். ஆனாலும் மகனை எதுவும் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்படித் தோல்வி பட்டியல் நீண்டு கொண்டிருந்தது.
இவையெல்லாம் ஒரு வெற்றிப் பாதைக்கு கிருஷ்ணனைத் தள்ளி விட்டது.
ஒரு நாள் தமிழகத்தின் மிகப்பெரிய பத்திரிகையில் வேலைக்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் வந்தது.
வீட்டிலிருந்த சில ரூபாய்களை எடுத்துக் கொண்டு பஸ் ஏறி சேலம் போய்ச் சேர்ந்தான். அங்கு தான் அந்த நேர்முகத் தேர்வு நடந்தது. அங்கும் அவன் தாமதமாகவே சென்றடைந்தான். ஏதாவது எழுதட்டுமே என்று ஒரு பக்கத்தை மொழிபெயர்ப்பு செய்யும்படி கொடுத்தார்கள். கடைசியாக வந்து எழுதியதை கொடுத்துவிட்டு வந்தார்.
இது அந்த பத்திரிகை முதலாளியின் கையில் கிடைத்தது. எல்லோருடைய மொழிபெயர்பைக் காட்டிலும் கிருஷ்ணன் எழுத்தில் ஒரு காந்த சக்தி இருப்பதை அவர் கண்டுபிடித்தார். உடனே அவர் கிருஷ்ணனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். பல தோல்விகள் அவனை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அவனுடைய பழக்கவழக்கங்களும் அவரைக் கவர்ந்தது.
வேலைக்குச் சேர்ந்ததும் தன் தந்தைக்கு ஒரு தபால் எழுதினார். அதில் தான் ஜவகர்லால் நேருவை பேட்டி கண்டதை எழுதினார். சந்தோசத்தில் திளைத்துப் போனார் தந்தை. இந்த விஷயமே எனக்கு மகிழ்வும் பெருமையும் அளிப்பதாக உள்ளது. நீ பணம் எதுவும் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். உன் பத்திரிகை துறையிலேயே மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பல படிகளைத் தாண்டி சப்எடிட்டர் ஆனார். எடிட்டராக தேர்வு செய்யத் தீர்மானித்தபோது ஒரு பிரச்சனை வந்தது. கிருஷ்ணனுடன் ஆரம்பத்திலிருந்து நண்பனாக இருந்தவரை விலக்கச் சொன்னார் முதலாளி. தன் நண்பனை விலகச் சொன்னால் தானும் விலுகுவதாகச் சொன்னார் கிருஷ்ணன். முதலாளி கிருஷ்ணனிடம் , ‘‘ நீ இந்தப் பத்திரிகைக்கு முதுகெலும்பு மாதிரி. உனக்கு உன் நண்பன் முக்கியமென்றால் நீயும் விலகிக் கொள்ள வேண்டும். முடிவு உன் கையில் என்றார்.
முதலாளியை விட நட்பே பெரியதென்று விலகிக் கொண்டார் கிருஷ்ணன். இந்த தோல்வி வெற்றிக்கு மற்றொரு பாதையாக அமைந்தது. புதிதாக ஆரம்பித்த பத்திரிகையில் சேர்ந்தார்.
புதிதாக ஆரம்பித்த பத்திரிகை ஒரு நாளைக்கு லட்சம் பிரதி விற்றது. வெற்றிநடை போட்ட அந்த பத்திரிகையின் குரல்வளையை நெரித்தார் பழைய முதலாளி. அந்தத் தேல்வி புதிய சொந்தப் பத்திரிகை ஆரம்பிக்க அடிகோலியது. அது அவரை பத்திரிகை உலகின் முடிசூடா மன்னராக மாற்றியது.
ஜனாதிபதி விருதும் இரு முறை பெற்றார். ரஷ்யாவின் 75வது சுதந்திரத்தை கொண்டாட கிருஷ்ணனுக்கு அழைப்பு அனுப்பியது. அதையும் ஏற்றுக் கொண்டார். நரசிம்மராவுடன் நிருபராகவும் பல நாடுகளுக்கும் சென்று பாராட்டுகள் பெற்றார்.
கிருஷ்ணனின் இந்தச் சாதனைகளைக் காண அவர் தந்தை தான் இல்லை. காலதேவனும் அவரை அழைத்துக் கொண்டாலும் வாழ்ந்து மறைந்தாலும் புகழுடனேயே சென்றது தான் வியப்பிற்குரியது.
மகத்தான தோல்விகள் அவரின் வாழ்க்கையை மாபெரும் வெற்றியாளராக மாற்றியது.