போஸ்டர் செய்தி

ப. சிதம்பரத்தை வலைவீசி தேடும் சி.பி.ஐ.

Spread the love

புதுடெல்லி,ஆக.21

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முடியாததால் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். நான்கு முறை சென்றும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர். தற்போது ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இரு ஒருபுறமிருக்க ப.சிதம்பரம் விமானங்கள் மூலம் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரிக்க மறுப்பு

இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ப.சிதம்பரம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் விடுமுறைக்கால சிறப்பு மனுவை அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தங்கா ஆகியோர் வாதாடினர்.

ப.சிதம்பரத்தை நேற்று கைது செய்வதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயற்சி செய்ததாக கபில் சிபல் குறிப்பிட்டார். மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கு உடனடியாக தடை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி ரமணா தெரிவித்தார். தலைமை நீதிபதி தான் முடிவு எடுப்பார் என கூறி, மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள், இந்த வழக்கை உடனே விசாரித்து இடைக்கால நிவாரணம் வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், உடனே விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வும் மறுத்துவிட்டது. இதனால் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் நீடிக்கிறது.

சிபிஐ ஏமாற்றம்

ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ தீவிரமாக இறங்கியது. முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து நேற்று மாலை, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். ஆனால் ப.சிதம்பரம் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவர் எங்கு சென்றார் என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதையடுத்து மீண்டும் நேற்று இரவு நான்கு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். அப்போதும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால், சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு திரும்பினர். அந்த நோட்டீசில் ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பினர்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டிற்குச் சென்றனர். இதனால் ப.சிதம்பரம் இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஆனால், சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *