செய்திகள்

போளூரில் இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி துவக்கினார்

போளூர். செப்.16–

அண்ணா தி.மு.க. கிளை நிர்வாகிகளுக்கு முதல் கட்டமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு கவனிப்பு காத்திருக்கிறது என போளூரில் நடந்த இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அக்ரிஎஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மூலம் பூத் வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் எல். ஜெயசுதாலட்சுமிகாந்தன் வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு இளைஞர் பாசறை மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான படிவங்களை அந்தந்த கிளை நிர்வாகிகளிடம் வழங்கி பேசியதாவது:–

அண்ணா தி.மு.க. என்ற கட்சி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி. பல வரலாறுகளும் தியாகங்களும் உள்ளடக்கிய கட்சி. இந்த கட்சியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே 3–வது பெரிய கட்சியாக உருவாக்கி காட்டினார். என் காலத்திற்கு பிறகும் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என அவர் சொன்ன வைரவரிகளுக்கு எடுத்து காட்டாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அறிவிக்கிறார். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்கிறார். அந்த திட்டங்கள் மக்களுக்கு உரிய முறையில் சேர்ந்ததா என கண்கானிக்கிறார்.

இந்தியாவிலேயே இப்போதைக்கு எளிய முதல்வராக உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் மிக்கவராக மக்களை தேடி சென்று சந்திப்பவராக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருகிறார். இளைஞர் பாசறையின் மூலம் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டியில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 10 வகுப்பு படித்தவர்களை நியமிக்க வேண்டும்.

இந்த படிவங்களை நிரப்பி தகுதியானவர்களை சேர்த்து வரும் 30–ம் தேதிக்குள் கட்சி தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே கிளை கழகங்களுக்கு ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டம் தான். கட்சி பணி சிறப்பாக செய்ய செய்ய அவர்களுக்கு மேலும் கவனிப்பு காத்திருக்கிறது. எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காத சாதாரண தொண்டர்களின் வியர்வையால் தான் இந்த கட்சி இந்தளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே அண்ணா தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வரும் போளூர் சட்டமன்ற தொகுதியை நாம் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என பேசினார்.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் எம்.சின்னதம்பி, கே.ராஜசேகர், எஸ்.கே.ராமமூர்த்தி, ஆர்.சசிக்குமார், எம்.ஏழுமலை, ஊராட்சி மன்ற தவைர்கள் அ.கோட்டீஸ்வரிஅசோகன், அ.அன்புக்கரசிராஜேந்திரன், சி.பெரியசாமி கு.யாசின், போளூர் நகர செயலாளர் கோ.பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *