மதுரை, பிப். 28–
மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி உலகநேரி கன்னிமாரியம்மன் கோவில் தெரு செங்குந்தர் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் டோரா பாலா என்கிற பாலமுருகன் (வயது29). இவர் மீது கே.புதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. உலகநேரி பகுதியில் ரவுடியாக உலாவந்த பாலமுருகன் கடந்த 22-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் கிடந்த அவரது உடலை மாட்டுத்தாவணி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது உலகநேரி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்(25), ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ரவுடி பால முருகனை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஜெகதீஷ்வரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வினோத்தின் தாய் பற்றி தவறாக பேசியதால் பீர்பாட்டிலால் குத்தி பாலமுருகனை கொன்று முட்புதரில் வீசி சென்றதாக தெரிவித்தார். இந்த கொலையில் வினோத், மேலூர் மாரி, விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகிய வினோத் உள்ளிட்ட 4பேரையும் கடந்த 23-ந்தேதி முதல் போலீசார் தேடி வந்தனர். வினோத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இந்நிலையில் வண்டியூர் சோதனைச் சாவடியை அடுத்த பாண்டியன் கோட்டை கல்குவாரியில் ரவுடி வினோத் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசாரை தாக்கிவிட்டு
தப்பி ஓட முயற்சி
இதையடுத்து மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளைச்சாமி, ராஜூ, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து தன்னிடம் இருந்த அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் மீது அரிவாளை வீசினார். அதில் போலீஸ் ஏட்டு சரவணன் வெட்டுக்காயமடைந்தார்.
இதையடுத்து வினோத் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் வினோத்தை சுட்டார். இதில் வினோத்தின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார்.துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வினோத்தை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரிவாள் வெட்டு காயமடைந்த போலீஸ் ஏட்டு சரவணனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.