போஸ்டர் செய்தி

போலீசாரை கண்டதும் ரூ. 1.57 கோடியை சாலையில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர்

சென்னை, மே, 27–

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவர்களை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மூன்று பைகளில் இருந்த ரூ.1 கோடியே 57 லட்சம் பணத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பி ஓடினான்.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சப்–இன்ஸ்பெக்டர் ராமு, ஆயுதப்படை காவலர் சக்திவேல், ஊர்க் காவல்படை வீரர் அண்ணாசாமி ஆகியோர் போலீஸ் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சுற்றிச்சுற்றி வந்துள்ளார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் தப்பிச் சென்றார். இதனால் போலீசார் அவரை விரட்டினர். இதனால் பயந்து போன அந்த வாலிபர் தான் வைத்திருந்த மூன்று பைகளை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டார். போலீசார் அந்த பையை எடுத்துப் பார்த்த போது உள்ளே 500 ரூபாய் பணக்கட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்தன.

இதுகுறித்து இரவு ரோந்துப் பணியில் இருந்த அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் அஜுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பணத்தை மீட்டு கோட்டூர்புரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பைகளில் இருந்த பணக்கட்டுக்களை எண்ணிப்பார்த்த போது மொத்தம் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 மற்றும் இரண்டு தங்க வளையல்கள் இருப்பது தெரியவந்தது.

அந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அந்த வாலிபர் எங்கிருந்து வந்தார், அவர் பணத்தை கடத்தி வந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து அந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட பணம் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அந்த பணம் அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *