செய்திகள்

போலி ரெம்டெசிவர் மருந்தால் டாக்டர் மரணம்: மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, மே 19–

போலி் ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:–

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் வந்த புகாரின் அடிப்படையில் திண்டிவனத்தில் மருத்துவர் ராமன் கொரோனா சிகிச்சையில் போலியான ரெம்டெசிவர் மருந்து அளிக்கப்பட்டதானால் இறந்து விட்டதாக அவருடைய சகோதரர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அந்த மருத்துவர் இறப்புக்கு காரணமான மருந்து ஒன்றையும் கொண்டு வந்து எங்களிடம் கொடுத்தார். மருத்துவ குழுவுடன் ஆய்வு மேற் கொண்டப்போது அது போலியான மருந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் அபராதம்

திண்டிவனத்தில் உள்ள ஐமேடு என்கிற தனியார் மருத்துவமனையில், அந்த மருந்து தரப்பட்டதாக புகார் வந்ததன் அடிப்படையில் உடனடியாக சென்னையில் இருந்து அலுவலர்கள் திண்டிவனத்துக்கு விரைந்தனர். அந்த மருத்துவமனைக்கு சுகாதார சட்டம் விதி 76-ன் படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின்‘ஆன்–லைன்’ மூலம் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு நிலையில், அதில் பதிவு செய்துள்ள 234 மருத்துவமனைகள் 71 மருத்துவமனைகள் 8 ஆயிரத்து 400 ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர்.

ஆவணங்களை சரி செய்தபிறகு உடனடியாக ரெம்டெசிவர் மருந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

ரெம்டெசிவர் மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவைப்படாது என்று கூறிய அவர் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *