செய்திகள்

போலி நகைகளை கொடுத்து ஏமாற்றிய 5 பேர் கும்பல் கைது

சென்னை, ஜூலை 3–

சென்னையில் போலி நகைகளைக் கொடுத்து ஏமாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த சில வட மாநிலத்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களது உடமைகள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்தபோது, அரை கிலோ தங்க நகை, பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது தெரிய வந்தது.

5 பேர் கைது

அதுமட்டுமில்லாமல் நகைகளை அடகு வைப்பதற்கான ரசீதுகளும் இருந்துள்ளது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் நகைக் கடைகளில் போலி நகையை கொடுத்து பணம் மற்றும் நகைகளை வாங்கி, பல இடங்களில் தங்களது கைவரிசையை காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கமலேஷ், அனிதா, நிர்மல் குமார், மாலதி, சோனி 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நகை மற்றும் பணத்தை ஏமாந்தவர்களிடம் பொருட்களை திருப்பி ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *