சிறுகதை

போலம்மா – ராஜா செல்லமுத்து

இன்று அதைச் செய்து விடுவது என்று முடிவு செய்தாள் ஜோதி .

ஜோதிக்கு அன்று மனம் ரொம்பவே வலித்தது. இதைச் செய்யலாமா வேண்டாமா என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்று அவள் மனது சொன்னது. எவ்வளவு நாளைக்குத்தான் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர் வீட்டுக்காரர்கள் என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பது.

முடிவு செய்த பிறகு அதை செய்யாமல் இருப்பது அவளுக்கு மன வருத்தத்தை தரும் .அதைவிட அருகில் இருக்கும் வீட்டுக்காரர்களுக்கு நாம் செய்யப் போகும் விஷயம் பெரிய சந்தோசத்தைத் தரலாம்.

எனக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தை அவர்களால் எப்படி உணர முடியும்? சரி நம்முடைய சந்தோசத்தை விட மற்றவர்களின் மரியாதை முக்கியம் என்பதை உணர்ந்து கொண்ட ஜோதி ஆட்டோவை தன் வீட்டிற்கு வரவழைத்தாள்.

அதுவரையில் அமைதியாக இருந்த ஜோதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இதுதான் கடைசி நாள் இன்றிலிருந்து போலம்மா நம்மை விட்டுப் போகப் போகிறாள் என்று அவளுக்குள் வேதனை வழிந்தது.

சரி இதைச் செய்து விடலாம் என்று இறுதி முடிவு எடுத்தாள் ஜோதி. இது எதுவும் தெரியாமல் சுருண்டு மூலையில் படுத்திருக்கும் போலம்மா என்ற குட்டி நாயைத் தூக்கினாள்.

அதுவரையில் அவளுக்கு போலம்மாவுக்கு என்னவென்று தெரியாது. எதற்காக நம்மை ஆட்டோவில் ஏற்றி போகிறார்கள் என்பதை உணராத அந்தக் குட்டி நாய் அதனுடைய உடல்மொழியில் ஜோதியிடம் பேசியது. பேசுவதற்கு வார்த்தை வராத ஜோதி அழுது கொண்டே போலம்மாவைப் பார்த்து

இனிமேல் உன்னை வீட்டில் வைக்க முடியாது. நீ கத்துறத தாங்கமுடியாமல் சுத்தி இருக்கிறவங்க எல்லாம் புகார் பண்றாங்க. அதனால உன்னை புளூ கிராஸ்ல கொண்டு போய் விட்டுடறேன். அங்க பத்திரமா சூதானமா இருக்கணும் என்று சொன்னபோது, அவள் என்ன சொல்கிறாள் என்பதை இரண்டு காதுகளையும் தூக்கி ஜோதியின் கண்களை உற்று நோக்கிய போலம்மா தலையைத் தலையை ஆட்டியது.அவள் பேசுவதற்கு ஓ என்று சொல்லும் அளவிற்கு ஏதோ ஒரு வழியில் உடலை அசைத்தது.

ஜாேதி வீட்டுக்குள் போலம்மா வந்த கதை சின்னதாக தெரிந்தது .

மழைக்காலம். குட்டியாக இருந்த போலம்மா அவளின் வீட்டுக்கு எதிரில் இருக்கும் காரின் அருகே உட்கார்ந்து கொண்டு மழையை தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தது. எல்லா வீடுகளும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் போலம்மாவை உற்றுநோக்கினாள் ஜோதி.

ஏங்க இங்க ஒரு நாய்க்குட்டி இருக்குது; என்னன்னு வந்து பாருங்க என்று கணவனிடம் செய்தி சொன்னதும் ஓடோடி வந்த கணவன்

ஆமா பாவம். இந்த மழையில நனைஞ்சுட்டு இருக்கு என்றான் ஜோதியின் கணவன்.

நம்ம வீட்டுக் கூட்டிட்டு வரலாமா? என்று ஜோதி சொல்ல

ஓ தாராளமா அது ரொம்ப குட்டியா இருக்கு என்று குடையைப் பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் வீதியில் இறங்கி காருக்கு கீழ் பதுங்கி இருந்த போலம்மாவைத் தூக்கிவந்தான் ஜோதியின் கணவன்.

கையில் வாங்கிய நாய் குட்டியை துணியால் துடைத்து சுத்தப்படுத்தினாள் ஜோதி. ஒழுகாத இடத்தில் அதை அமர்த்தி விட்டு உணவும் கொடுத்தாள்.

மறுநாள் காலை எப்படியும் நம்மை விட்டு ஓடிவிடும் என்று நினைத்திருந்த ஜோதிக்கு அவள் நினைத்ததற்கு மாறாக அந்த நாய்க்குட்டி அங்கேயே இருந்தது ஏதோ சொல்லிப் பார்த்தாள்.

அது அந்த இடத்தை விட்டு நகலவில்லை. சரி இன்று சாப்பாடு வைக்கலாம் என்று சாப்பாடு வைத்தாள். ஜோதியையும் அவள் கணவனையும் வளைய வளைய வந்தது.

இந்த நாய்க்குட்டி என்னங்க அத சும்மா மழைக்கு தூக்கிட்டு வந்தா நம்ம வீட்டிலேயே ஒட்டிகிச்சு. இப்ப என்ன பண்ணலாம்.

என்று ஜோதி சொல்ல

சரி நம்ம வீட்லயே இருந்து போட்டுமே .அதுக்குன்னு தனியா நம்ம சமைக்க போறதில்ல. நமக்கு செய்ற சாப்பாட்டில கொஞ்சம் போட்டா சாப்பிடும்; இருக்கட்டும் என்று பச்சைக்கொடி காட்டினான் ஜோதியின் கணவன்.

அதிலிருந்து அந்த நாய் அவர்களுடனே இருந்தது .

ஒரு நாள் தன் கணவரிடம்

ஏங்க இந்த நாய்க்கு ஏதாவது ஒரு பெயர் வைக்கணுமே? என்னன்னு சொல்லுங்க

என்று ஜோதி கேட்டபோது

ஏதேதாே பெயர் சொல்லிக் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காத அந்த நாய்க்குட்டி தன் கணவனின் அம்மா பேரான பாேலம்மா என்ற பெயர் சொன்னதும் திரும்பிப் பார்த்தது.

அப்போ இந்த பேர்தான் இந்த நாய்க்கு புடிச்சிருக்கு போல. இனிமே அந்த நாய் குட்டிக்கு போலம்மா என்று பேர் வைத்துக் கூப்பிட்டார்கள்

ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் இரண்டு நாட்கள் கடந்தன. அதுவரை அமைதியாக இருந்த நாய்க்குட்டி கத்த ஆரம்பித்தது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் புகார் அளிக்க ஆரம்பித்தார்கள்.

இது பிரச்சனையான விசயமாக இருக்கிறதே சுற்றி இருக்கும் மனிதர்கள் நம்மைத் தவறாக நினைப்பார்கள் அது கூடாது என்று நினைத்த ஜோதி அன்று போலம்மாவைத் தூக்கிக்கொண்டு புளூ கிராசில் விடுவதற்கு தான் சென்று கொண்டிருந்தாள்.

இது அத்தனையும் பின்னோக்கி செல்ல ஆட்டோ புளூ கிராஸை ஒட்டி நின்றது. புளூ கிராஸ் காரர்களிடம் சொல்லி உள்ளே விடுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருந்தாள்.

அதுவரையில் நடப்பது என்னவென்று தெரியாத போலம்மா ஜோதி முகத்தைப் பார்ப்பதும் கீழே பார்ப்பதும் அவள் பேசுவதைக் கேட்பதுமாக இருந்தது ஒரு கட்டத்தில் புளூ கிராஸில் ஒப்படைத்து தூக்கிப் போகும் பாேது ஜோதியின் காலையே வளைய வளைய வந்தது.

பாேலம்மாவுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது .ஜோதிக்கும் தாங்க முடியாத துயரம். அவள் கண்களிலும் நீர் ஒழுகியது.

அம்மா இது சரியா வராது. இவ்ளோ பாசமா இருக்கிற நாய கொண்டு வந்து இங்க விடுறது தப்பு. நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க

என்று சொன்னபோது அதுவரையில் புளூ கிராஸில் தான் விட்டுவிட்டு வரவேண்டும் என்று இந்த நினைப்பில் இருந்த ஜோதிக்கு பாேலம்மாவின் அன்பும் அழுகையும் அவளை ஈரமாக்கியது.

உன்னைய நான் இங்க விட மாட்டேன். யாரு சண்டை போட்டாலும் பிரச்சினை வந்தாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல என்று பாேலம்மாவை இறுக அணைத்தாள். இந்தப் பாசப் போராட்டத்தைப் பார்த்த புளூ கிராஸ் காரர்களுக்கு என்னவோ போலானது.

பாேலம்மாவை வீட்டுக்கே கொண்டுவந்தாள் ஜோதி.

என்ன ஆச்சரியம்….

அன்றிலிருந்து போலம்மா கத்தாமல் வளர்ந்தாள்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *