காசா, மே 7–
காசாவின் ராஃபா நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தார் முன்மொழிந்த போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒப்புதல் தகவல்
காசாவின் ராஃபா நகரிலிருந்து பொது மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தார் முன்மொழிந்த போர்நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. போர் நிறுத்தத்துக்கான ஒப்புதலை கத்தார் பிரதமர் மற்றும் எகிப்து உளவுத் துறை அமைச்சரிடம் ஹமாஸ் படைத் தலைமைத் தளபதி இஸ்மாயில் ஹனியே தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தகாக ஹமாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தார், எகிப்து ஆகிய இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் பல மாதங்களாக பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின. ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக ஹமாஸின் இந்த முடிவு குறித்த அறிவிப்பு, பாலஸ்தீன மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்திற்காக ஹமாஸ் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னவென்று இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனினும், காசாவில் இருந்து இஸ்ரேல் படையினரைத் திரும்பப் பெற்றால், பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க தயாராக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஆய்வு செய்து வருகிறது எனவும் போர்நிறுத்த பரிந்துரை இஸ்ரேலுக்கு ஏற்ற வகையில் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.