ஜெருசலேம், பிப். 18–
“ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் என்பது உறுதியாகிவிட்டது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் போர் 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்கவும், போர் நிறுத்தத்தை கொண்டு வரவும் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் தலையீட்டில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது நிரந்த போர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஹமாஸ் அமைப்பினர் முன் வைத்தனர். இதனை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியதாவது: பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது. பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை. ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் கூறினார்.