சென்னை, மே.8-
சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 300 இடங்களில் நேற்று போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதனையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் பங்கேற்றனர். இதேபோல் பல பள்ளிக்கூடங்களில் நடந்த ஒத்திகையில், மாணவ, மாணவிகள் மேஜைகளின் கீழ் அமர்ந்து கொண்டனர். இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகரை இருள் சூழ்ந்தது.
இதேபோல் பஞ்சாப், கர்நாடகம், மராட்டியம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
அதன்படி சென்னை துறைமுகத்திலும், கல்பாக்கத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. துறைமுகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஒத்திகை ஒரு மணி நேரம் நடந்தது. இதில் 500 பேர் பங்கேற்றனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, மாலை 4 மணிக்கு சித்தரிக்கப்பட்ட வான்வழி தாக்குதல் தொடங்கியது. அப்போது ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் குறித்து சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தின் அவசரகால திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மத்திய, மாநில முகமைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடலிலிருந்து எதிர்நோக்கும் தாக்குதல்களை தடுப்பதற்கும் துறைமுகத்தின் கடற்பகுதியை அணுகுவதிலிருந்து பாதுகாப்பதற்கும் இந்திய கடலோர காவல்படை 2 கப்பல்களை தயார் நிலையில் உடனடியாக செலுத்தி ஒத்திகை பார்க்கப்பட்டது.
சித்தரிக்கப்பட்ட வான்வழி தாக்குதலின்போது, தீப்பிடிக்கக்கூடிய பொருட்களுடன் வைக்கப்பட்டிருந்த தொட்டி வடிவ கட்டுமானத்தில் தீப்பிடித்ததாக சித்தரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து அங்கு இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். காணாமல் போனவர்களை அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஆம்புலன்ஸ் மூலம் அவசரகால பகுதிகளுக்கும், ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்வது, டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது போன்றவை செய்து காட்டப்பட்டன.
சென்னை துறைமுகம்
ஒத்திகை நிகழ்ச்சிக்கு சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவன தலைவர் சுனில் பாலிவால் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, பூக்கடை, போலீஸ் துணை கமிஷனர் பி.சுந்தர வடிவேல் ஆகியோர் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சி ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைமுறைகள், அர்ப்பணிக்கப்பட்ட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது. பயங்கரவாத தாக்குதலின்போது தற்காப்புக்கான நடவடிக்கைகள் உள்பட உள்நாட்டு பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இதில் இடம் பெற்றன.
கல்பாக்கம் அணுமின் நிலையம்
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடந்த ஒத்திகை பயிற்சியில் கலெக்டர் அருண்ராஜ், துணை கலெக்டர் மாலதி, மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளான ஊர்காவல்படை, அதிவிரைவுப் படை, தீயணைப்புத்துறை மற்றும் தொடர்புடைய பிற துறை அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து மாலை 5.30 மணி அளவில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகில் உள்ள வெங்கப்பாக்கத்தில் தமிழ்நாடு கமாண்டோ போலீசார் 27 பேர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 38 பேர், தமிழ்நாடு போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
…
சென்னை துறைமுகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையின் போது எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது? என்பது குறித்து ஒத்திகை நடந்த போது எடுத்தபடம்.