செய்திகள்

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது 2 நாளில் முடிவெடுக்க வேண்டும்

Makkal Kural Official

போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 31–

போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், இந்த விண்ணப்பங்கள் மீது 48 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளது.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2024 நவம்பர் 7ம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக சென்று தமிழக கவர்னரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது, முந்தைய நாளான 2024 நவம்பர் 6ம் தேதி அனுமதி மறுத்து போலீசார் உத்தரவு பிறப்பித்ததால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த போலீசார், போராட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, அது தொடர்பாக பல்வேறு விவரங்களை அளிக்குமாறு கேட்கப்பட்டதாகவும் ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் தான், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பேரணி நடைபெறாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விண்ணப்பங்களைப் பெற்ற 48 மணி நேரத்துக்குள் அவற்றின் மீது முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 10 நாட்களுக்கு முன் விண்ணப்பம் அளித்த புதிய தமிழக கட்சியினரின் விண்ணப்பத்தை நிராகரித்து கடைசி நேரத்தில் உத்தரவிட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அக்கட்சியினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேபோல கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *