செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அமெரிக்கா, கனடாவிலும் பறக்க தடை

வாஷிங்டன்,

எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில் தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க தடை விதிப்பதாக அமெரிக்கா, கனடா அறிவித்துள்ளது.

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10-ந்தேதி தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன.

இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்து உள்ளது.

இந்தியா, எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன. இதைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனடாவும் போயிங் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை மந்திரி மார்க் கர்னோவ் கூறும்போது, பாதுகாப்பு கருதி வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *