செய்திகள்

போப் ஆண்டவர் உடல்நிலை மோசம்: இறுதி ஊர்வல ஒத்திகைகள் தொடக்கம்?

Makkal Kural Official

வாடிகன், பிப். 20–

கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உயிர் பிழைப்பது கடினம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இறுதி ஊர்வலத்துக்கான ஒத்திகைகள் தீவிரமடைந்தாக கூறப்படுகிறது.

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் 10 வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்குமிட வசதியுடன் உள்ள வார்டில் அவரது செயலாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவரை சந்தித்தார். போப் பிரான்சிஸை சுமார் 20 நிமிடங்கள் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எச்சரிக்கையாகவும் பதிலளிக்கக்கூடியவராகவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருப்பதாகக் தெரிவித்தார்.

இதனிடையே போப் ஆண்டவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பரிசோதனைகள் மூலம் அவருக்கு நுரையீரலில் இரட்டை நிமோனியா மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் படுக்கையில் இருந்து எழுந்து, சாப்பிட்டு முடித்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.

நோய் பாதிப்பு அதிகம்

மருத்துவர்களின் அறிக்கைப்படி போப் பிரான்சிஸ் பாலிமைக்ரோபியல் சுவாசக்குழாய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற உயிரினங்களின் கலவை அவரது சுவாசக் குழாயில் தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ், பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிக்கல்களின் அபாயத்தில் உள்ளதாகவும் மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருவதால், அவர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை என்றும் அவரது நுரையீரலில் தேங்கி நிற்கும் திரவங்களை அகற்றுவது கடினமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளன. போப் பிரான்சிஸ் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

போப் ஆண்டவரின் உடல் நிலை காரணமாக இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இம்முறை போப் ஆண்டவர் பிழைப்பது கடினம் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வாடிகனில் போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போப் ஆண்டவர் இந்த வாரத்தை கடப்பதே கடினம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது மரண செய்தி அறிவிப்பு குறித்த தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போப் ஆண்டவரின் உடல் நிலை குறித்த தகவல் கத்தோலிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *