சிறுகதை

போனஸ் – ராஜா செல்லமுத்து

அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் தீபாவளி போனஸ் போட்டாகிவிட்டது .

ஆனால் நாராயணனுக்கு மட்டும் போனஸ் வரவே இல்லை .வேலை செய்யும் அத்தனை பேரும் போனஸ் வாங்கிய விஷயத்தை சந்தோஷமாகப் பகிர்ந்துகெண்டார்கள்.

ஆனால் நாராயணன் தனக்கு போனஸ் தரவில்லை என்று சொன்னால் ஏளனமாக நினைப்பார்கள் என்று அவர் சிரித்தே மழுப்பினார்.

இதை முதலாளிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று ஒரு பட்டிமன்றம் அவருக்குள் நடந்து கொண்டிருந்தது.

அத்தனை பேருக்கும் ரொக்கப் பணம், பட்டாசு, இனிப்பு என்று கொடுத்திருக்கிறார்கள். காலமெல்லாம் அந்த நிறுவனத்தில் கிடக்கும் நாராயணனுக்கு மட்டும் போனஸ் இனிப்பு பட்டாசு கொடுக்கவில்லையே என்பது எல்லோருக்கும் ஒரு வியப்பாக இருந்தது .

கேட்டுப் பெறுவது யாசகம். கேட்காமல் கொடுப்பதுதான் பெருந்தன்மை என்று முதலாளிடம் கேட்காமல் இருந்தார் நாராயணன்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் தன்னை மறந்திருந்தாலும் போனஸ் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் நாராயணன்.

ஒருநாள் கழிந்தது. மறுநாளும் கழிந்தது. இனி நமக்கு இந்த நிறுவனத்தில் இருந்து போனஸ் தர மாட்டார்கள். எவ்வளவுதான் நன்றியுடன் இருந்தாலும் நம்மை மறந்து விட்டார்களே? என்ற ஏக்கமும் வருத்தமும் நாராயணனுக்குள் முளைவிட்டன.

சரி நமக்கு குடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று மனம் வருந்தினார்

தீபாவளிக்கு முன்னராசு அவருக்கு தூக்கமே வரவில்லை. எப்படி எல்லாம் அந்த நிறுவனத்திற்கு உழைத்தோம். முதலாளி எப்படியெல்லாம் நம்முடன் நட்பாக பழகினார். ஆனால் இந்தச் சின்ன விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாரே? நமக்கு கொடுக்கும் போனஸ் பணத்திலா அவர்களின் வருமானம் குறைந்து விடப்போகிறது. இல்லை நமக்கு கொடுப்பதால் அவர்களுக்கு இழப்பு ஏதும் வந்து விடப் போகிறதா? இந்த சொற்பப் பணத்தைச் சேமித்து வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று அந்த நிறுவனத்தின் மீது தன் பிடிப்பைத் தளர்த்தினார் நாராயணன்.

எப்படியும் நமக்கு போனஸ் இல்லை என்று ஆகிவிட்டது என்று முகம்வாடி இருந்த நாராயணனை

அட விடுங்க கொடுத்தா நமக்கு நல்லது. கொடுக்கலன்னா அந்த நிறுவனத்துக்கு நல்லது. ‘என்ன காரணத்தாலோ தெரியல உங்கள அவங்க மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. என்று மனைவி சொன்னாள். மனைவியின் பேச்சுக்கு பதில் சொல்லாத நாராயணன் மெளனத்தையே பதிலாகத் தந்தார்

சரி ஆனதாகட்டும் என்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தீபாவளியை கொண்டாடலாம் என்று முடிவு செய்தார் நாராயணன்.

அந்தத் தீபாவளி அவர்களுக்கு பெரிதாகச் சுகத்தைத் தரவில்லை. வீட்டில் சின்னக் குழந்தைகள் இல்லை என்றாலும் போனஸ் என்பது ஒரு மரியாதையை கொடுக்கும். அத்தனை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தன்னை நிராகரிப்பது எந்த வகையில் நியாயம்? என்று அந்த விஷயமே திரும்பத் திரும்ப நாராயணனைக் குடைந்தது .

அப்போது நாராயணன் வீட்டுக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது.

நம் வீட்டின் முன்னால் யார் இந்நேரம் காரில் வருகிறார்கள்? என்று படபடத்துப் போய் நாராயணனும் அவர் மனைவியும் வாசலுக்கு ஓடி வந்தார்கள். அவர்கள் கண்டது உண்மையா அல்லது கனவா? என்று தங்களை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.

நாராயண வீட்டிற்கு வந்தது முதலாளியும் அவர் மனைவியும் என்ன நாராயணா இன்னைக்கு உங்க வீட்ல தான் எங்களுக்கு தீபாவளி விருந்து என்று சிரித்தபடியே உள்ளே நுழைந்தார் முதலாளி உடன் அவர் மனைவியும்வந்திருந்தார்.

மனைவியின் கையில் தட்டுடன் நாராயணன் மனைவிக்கு சேலை நாராயணனுக்கு சட்டை, பழங்கள் இனிப்புகள் என்று அத்தனை இருந்தன.

என்ன பாக்குற நாராயணா? எல்லாம் உனக்குத்தான். ஆபீஸ்ல இருக்கிற எல்லாருக்கும் போனஸ் கொடுத்தோம். அவங்கெல்லாம் வேலை செய்ற ஊழியர்கள். ஆனா உன்னைய நாங்க அப்படி நினைக்கலப்பா. ஒன்ன என் குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கிறேன்.அதனாலதான் வீடு தேடி வந்து இருக்கேன். இந்தா வாங்கிக்க என்று புடவை சேலை, இனிப்பையும் கொடுத்தார் முதலாளி .அதில் ஒரு பணக்கட்டும் இருந்தது.

இல்லை சார் வேண்டாம் எனக்கு இது என்று நிராகரித்தார் நாராயணன்.

அட உனக்குத்தான் பா. உன்னை நான் என் கூட பிறந்த தம்பியா தான் நினைக்கிறேன். எடுத்துக்கோ என்று சொல்ல அதுவரையில் முதலாளியைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த நாராயணன் சிந்தனைகள் எல்லாம் சுக்கு நூறாய் சிதறி ஓடின.

சிறிது நேரத்திற்கு எல்லாம் நாராயணன் மனைவி சமைத்து முடித்தாள். நாராயண் வீட்டிலேயே காலை உணவை முடித்த முதலாளி

சரி நாராயணா ரெண்டு நாள் லீவு முடிச்சுட்டு வேலைக்கு வந்துரு. வரட்டுமா?. என்று கையெடுத்து வணங்கி விட்டு புறப்பட்டார் .

யாரையும் நாம் தவறாக நினைத்து விடக்கூடாது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் பின் விளைவு இருக்கும். நம்மை ஒருவர் நிராகரிக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் பெரிய அங்கீகாரம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார் நாராயணன்.

அப்போது அவர் மனதில் மகிழ்ச்சி மத்தாப்புகள் பூப் பூவாய் பூத்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *