சிறுகதை

போதை பேதம்- ராஜா செல்லமுத்து

காலையிலிருந்து இரவு வரை பேருந்து வெப்பத்திலிருந்து புழுங்கி வியர்த்துச் சோர்வாகி அமர்ந்திருந்த நடத்துனர் கேசவனுக்கு எப்போது பஸ் டிப்பாே செல்லும் போய் வண்டியை விட்டுவிட்டு வீட்டிற்கு போய் அப்பாடா என்று தூங்கலாம் என்றிருந்தது.

அதையே நினைத்துக் கொண்டே வந்தார் கேசவன்.

ஆனால் வரும் நிறுத்தங்களில் எல்லாம் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆள் நின்று கொண்டிருந்ததால் ஓட்டுநர் ராகவன் எல்லா நிறுத்தங்களிலும் பஸ்ஸை நிறுத்தி நிறுத்தி ஆளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வளவு கூட்டம் இல்லை என்றாலும் அளவான கூட்டம் ஏறியது. பெண்களுக்கான இலவச பயணச் சீட்டை கொடுத்துவிட்டு ஆண்களுக்கான டிக்கெட்டை கிழித்து கொடுத்து பணம் வாங்குவதும் சில்லறை கொடுப்பதுமாக இருந்தார் கேசவன்.

சில்லறை கொடுக்காத ஆட்களிடம் சரியான சில்லறை கொடுக்கச் சொல்லியும் சில்லறை கொடுப்பவர்களுக்கு தன்னிடம் இருந்த சில்லறையை கொடுப்பதுமாய் அந்த இரவு நேரம் சென்று கொண்டிருந்தது.

ஒரு நிறுத்தத்தில் ஏறிய பயணி சராசரி மனிதர்களை விட சற்று தள்ளாடியபடி ஏறினான்.

இவன் நம்ம கூட வம்பு இழுக்கத் தான் ஏறுகிறான் என்று நினைத்த கேசவன் தள்ளாடியபடியே நின்று கொண்டிருந்த அந்தக் குடிகாரனிடம் போய் டிக்கெட்…. டிக்கெட் என்று குரல் கொடுத்தார்.

அவன் கேசவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டு தன் கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து செல்லும் இடம் சொல்லாமலே டிக்கெட்… டிக்கட் என்றான்.

எங்க போகணும் இடத்தை சொல்லு என்ற போது அவன் இறங்கும் இடத்தை வாய் திறந்து சொல்லாமல் டிக்கெட் டிக்கெட் என்றுபடியே சொல்லிக் கொண்டிருந்தான்.

கடைசிப் பேருந்து டிப்போவில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வேகமாக செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கேசவனுக்கு அந்தக் குடிகாரனின் செய்கை கோபத்தை வரவழைத்தது. அவன் நிற்கக் கூட திராணியில்லாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டு டிக்கெட் என்று சொன்ன வார்த்தையையே சொல்லிக் கொண்டிருந்தான். அவன் போட்டிருந்த ஃபேன்டின் பின் பாக்கெட்டில் ஒரு பிராந்தி பாட்டில் சொருகி இருந்தது. அதையும் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் கவனிக்கத் தவறவில்லை.

எங்க போகணும் எங்க டிக்கெட் கொடுக்க என்று மறுபடியும் கேசவன் கேட்டபோது, அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் டிக்கெட் டிக்கெட் என்று சொன்னபடி இருந்தான்.

நகரப் பேருந்துகளில் எல்லாம் யாராவது சண்டை போட்டாலோ இல்லை அந்தப் பேருந்தில் ஏது நடந்தாலும் அவரவர் வேலையை கவனித்துக் கொண்டு இருப்பார்களே ஒழிய எதற்காகச் சண்டை போடுகிறார்கள். இது வீண் பேச்சு என்று யாரும் சொல்லி அவர்களை சமாதானப்படுத்த மாட்டார்கள் .

அது போல தான் கேசவனுக்கும் அந்தக் குடிகாரனுக்கும் இடையேயான வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாகா அந்தக் குடிகாரனிடம் வந்தார்.

நீங்க எங்க போகணும் என்று அந்த குடிகாரிடம் கேட்டபோது

டிக்கெட் டிக்கெட் என்று நாகாவிடமும் சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தான். குடிகாரனையும் நடத்துனரையும் பார்த்த நாகா

சார் ஒன்னு செய்யுங்க. இந்த ஆளு எங்க இறங்கனும் அப்படிங்கறது சொல்ல மாட்டேங்குறான் .எந்த டிக்கெட் கொடுக்கணும் அப்படிங்கறது உங்களுக்கும் தெரியல . அதனால இந்த வண்டி எங்கு வரைக்கும் போகுதோ அந்த எடம் வரைக்கும் டிக்கெட்ட கிழிச்சு அவன் கையில கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்கோங்க. அவன் எங்கே இறங்கினாலும் உங்களுக்கு பிரச்சனை வராது. செக்கர் புடிச்சாலும் எந்த பிரச்சனை வராது என்று சமயோகிதமாகச் சொன்னார் நாகா.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு சக பயணி

ஆமா சார் இவர் சொல்றதும் சரிதான். இந்த பஸ் எங்க கடைசி டிப்போ போகுதோ அதுவரைக்கும் டிக்கெட்டை கிழிச்சு கைல கொடுத்துடுங்க. அந்த ஆள் எங்கே எறங்குனாலும் பரவாயில்ல என்று அந்த பேருந்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சொன்னார்கள்.

அதை சரி என்று புரிந்து கொண்ட கேசவன் அவன் கையில் இருந்த பணத்தை வாங்கிக் கொண்டு அந்த பேருந்து கடைசி டிப்போவிற்கு எவ்வளவு பணம் வருகிறதோ அதற்கான டிக்கெட்டை கிழித்து கொடுத்தார் .

உடனே அந்தக் குடிகாரன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு

என்ன 15 ரூபாய் டிக்கெட் கொடுக்குறீங்க. நான் ரெண்டு ஸ்டாப் தள்ளி தான் இறங்கணும் என்று அப்போதுதான் வாய் திறந்து சொன்னான்.

ஏண்டா இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இருக்காரு. எங்க இறங்கணும்னு நீ எடத்த சொல்ல மாட்டேன்னு டிக்கெட் டிக்கெட்ன்னு சொல்லிட்டடு தான இருந்தே. ஏதோ வடிவேல் காமெடி மாதிரி கண்டுபிடி பார்க்கலாம் அப்படின்னு கண்டக்டர் ஒன்ன கண்டுபிடிப்பாங்களா. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வெயில்ல வேலை பாத்துட்டு இருக்காங்க. நீ குடிச்சிட்டு ஜாலியா வந்து கிண்டல் பண்ணிட்டு இருக்கியா ?அதெல்லாம் கொடுக்க முடியாது என்றதும்

அந்தக் குடிகாரன் நாகாவுடன் சண்டை போட ஆரம்பித்தான்.

டேய் கண்டக்டர் கிட்ட பேசின மாதிரி என்கிட்ட பேசினா ஓடுற பஸ்ஸிலிருந்து கீழே தள்ளிவிட்டுருவேன் என்று நாகா கொஞ்சம் சத்தமாக பேச ,அந்தக் குடிகாரன் கொஞ்சம் குரல் எடுத்துப் பேசினான்.

இப்போது நாகாவின் பக்கம் பயணிகள் சேர்ந்து கொண்டார்கள். ஒரு நிறுத்தத்திற்கு முன்னாலேயே விசில் அடித்தார் கேசவன். தரதரவென்று அந்த குடிகாரனை இழுத்து நடுரோட்டில் இறக்கி விட்டார் நாகா.

நான் உன்னை சும்மா விடமாட்டேன் நான் உன்ன சும்மா விடமாட்டேன் இந்த வழி தான் நீ வரணும் வா என்ன பண்றன்னு பாரு என்று உரக்கக் குரல் கொடுத்தான் குடிகாரன்.

நகரும் பேருந்தை நோக்கி ஓடி வந்தான் அந்தக் குடிகாரன். பேருந்தை வேகம் எடுத்தார் ஓட்டுனர்.

அப்படி இப்படி என்று ஓடிவந்த அந்த குடிகாரன் ஒரு கட்டத்தில் விழுந்தான்.

தன்னை பேருந்து நடுரோட்டில் இறக்கி விட்டது. ஒருவன் நம்மை திட்டினால் நம் பணம் போய் விட்டது என்றெல்லாம் பார்க்காமல் தன் பையில் இருந்த பிராந்தி பாட்டில் கீழே விழுந்து உடைந்ததை நினைத்துக் கதறி கதறி அழ ஆரம்பித்தான் .

பேருந்து இப்போது தொலைதூரம் போய்க் கொண்டிருந்தது. உடைந்து சிந்திய பிராந்தியை தொட்டு தொட்டு பார்த்து அழுதான்.

பூமியிலும் ஈரம் இருந்தது. குடிகாரன் கண்ணிலும் கன்னத்திலும் ஈரமிருந்தது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *