சென்னை, மே 29–
சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் துணை ஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து பெரியமேடு, மை லேடி பூங்கா அருகில் நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த விஜய்குமார் (எ) மணிகண்டன், குமார், பெரியதுரை, ராஜேஷ், நரேஷ் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 5 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.