செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு

சிங்கப்பூர், ஏப். 26–

கஞ்சா கடத்தியதாக சிங்கப்பூரில் தமிழர் தங்கராஜ் தூக்கலிடப்பட்டார்.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஆனால், அந்த நாடு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கொரானாவுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்ற ஆரம்பித்ததால், பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை விநியோகம் செய்வதற்கு போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா (வயது 46) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்காக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தங்கராஜ் தனது வழக்கை மறுஆய்வு செய்யக் கோரி 2022-ம் ஆண்டின் இறுதியில் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அவருடைய குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும், அவர்களுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசுக்கு பயந்துகொண்டு யாரும் வழக்கை எடுக்க முன்வரவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. தங்கராஜுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாக கடந்த 23-ம் தேதி ஒற்றுமை நிகழ்வு ஒன்றை நடத்தினார். இதில் கலந்துகொண்டவர்கள் கருணை மனுக்களைத் தயார் செய்தனர். பின்னர் 59 கடிதங்கள் சிங்கப்பூர் அதிபரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகமான இஸ்தானாவுக்கு வழங்கப்பட்டன. அவர்கள்எந்த பதிலும் வழங்கவில்லை.

கடைசி நிமிட கருணை

மனுவும் நிராகரிப்பு

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக சிறையிலிருந்த தங்கராஜ் இன்று தூக்கிலிடப்பட்டு தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில் நேற்று அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

தங்கராஜ் சுப்பையா தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் உறவினர்கள் சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தற்போது அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இது குறித்து தங்கராஜ் சுப்பையாவின் மூத்த சகோதரி லீலாவதி, மருமகள் சுபாஷினி ஆகியோர் ஊடகங்களிடம் கூறியதாவது:

தங்கராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்தே அவரது வழக்கை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாங்கள் வலியுறுத்தினோம். நியாயமான விசாரணை இல்லை. அதனால் நாங்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். தற்போது ஒரு கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதற்காக தங்கராஜுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக, எங்களுக்கு அரசு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அதைத் தொட்டதே இல்லை. தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என்று அதிபர் அலுவலகத்தில் கருணைக் கடிதங்களைச் சமர்ப்பித்தோம். ஆனால் பலன் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *