போஸ்டர் செய்தி

போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா தி.மு.க.வினர் ஆர்வத்துடன் மனு

சென்னை, ஏப்.21–
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் ஏராளமான பேர் விருப்ப மனு கொடுத்தார்கள்.
மிகுந்த ஆர்வத்துடன் வந்து பணம் செலுத்தி விருப்ப மனு கொடுத்தார்கள். அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் மிகுந்த உற்சாகமும், எழுச்சியும் காணப்பட்டது. ‘கியூ’வில் நின்று மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 18–ந் தேதி அன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடந்தது. 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த போதிலும் 4 தொகுதிகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்ததால் அந்த 4 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்றங்க ளில் வழக்குகள் முடிவடைந்த நிலையில் அடுத்த மாதம் (மே) 19–ந் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 4 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
25 ஆயிரம் ரூபாயாக செலுத்தி விருப்ப மனு பெற்று அதனை பூர்த்தி செய்து இன்றைய தினமே கொடுக்க வேண்டும் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 10 மணி அளவில் கவுண்டர் திறக்கப்பட்டு மனுக்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பேர் காலையிலேயே வந்து காத்திருந்தனர். கவுண்டர் திறக்கப்பட்டதும் பெயர், முகவரியை எழுதி கொடுத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி மனுக்களை வாங்கினார்கள். உடனேயே அங்கேயே அமர்ந்து விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
ஆர்வத்துடன் மனு
மிகுந்த ஆர்வத்துடன் வந்து விருப்ப மனு கொடுத்தார்கள். அவரவர் ஆதரவாளர்களுடன் அங்கு வந்து வாழ்த்து கோஷம் எழுப்பி மனு கொடுத்தார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளர் எஸ். கோகுலஇந்திரா போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மதுரை முன்னாள் துணைமேயர் நவநீத கிருஷ்ணன் மனு கொடுத்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓ.கே. சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஆர். ராஜாங்கம், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போசின் மகன் சிவசுப்பிரமணியன், மாணவர் அணி துணை செயலாளர் சோலை கண்ணன் உட்பட ஏராளமான பேர் மனு கொடுத்தனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அமைப்பு செயலாளர் என்.சின்னதுரை போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளார். 2011–ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்திருந்தார். கடைசி நேரத்தில் இந்த தொகுதி கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒதுக்கப்பட்டதால் என்.சின்னதுரைக்கு கொடுக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டது. இப்போது என்.சின்னத்துரை ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்திருக்கிறார்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு நகர செயலாளர் சையது இப்ராகிம் உட்பட பலரும் மற்றும் சூலூர் தொகுதிக்கு ஏராளமான பேர் விருப்ப மனு அளித்தனர். தொடர்ந்து ஏராளமான பேர் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.
வேட்பு மனு தாக்கல்
நாளை துவங்குகிறது
4 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 29–ந் தேதி கடைசி நாள் ஆகும். 30–ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 2–ந் தேதிக்கு வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும்.
நாளை முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குவதால் இன்னும் ஓரிரு நாளில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *