டெல்லி, பிப். 12–
போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்களை 2026 ஆம் ஆண்டுவரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார்.
ஐந்தாண்டுகளில் விரைவு நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போச்சோ வழக்குகளைக் கையாள்வதற்காக நாட்டில் விரைவு நீதிமன்றங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதா; அதன் விவரங்கள் என்ன?” என்ற உடுக்குறியிட்ட கேள்விகளை ( starred questions) ரவிக்குமார் எம்.பி எழுப்பியிருந்தார்.
சட்டஅமைச்சர் பதில்
நாடாளுமன்றத்தில் அதற்கு பதிலளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் ரிஜிஜு, “ பாலியல் வல்லுறவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் தேங்கி கிடப்பதால் ஏற்படும் சிக்கல்களை உணர்ந்து இந்திய அரசு, குற்றவியல் திருத்தச் சட்டம் 2018 ஐ கொண்டு வந்தது. இது இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம்–1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம்–1973 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம்– 2012 ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கான குறைந்தபட்ச தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தியது. அது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்யும் வழக்குகளில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
மேலும் உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்த வழக்கின் தீர்ப்பில் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 389 பிரத்தியேகமான போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை (FTSCs) அமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அரசு முழுமையாக நிதியளித்து ஒரு திட்டத்தை தொடங்கியது. ஒவ்வொரு நீதிமன்றமும் ஆண்டுக்கு 165 வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டும் என இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள ஏராளமான போக்ஸோ வழக்குகளைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கையை நீதித்துறை தொடங்கியுள்ளது என்ற விவரங்களை அமைச்சர் அறிக்கையாக அளித்துள்ளார்.