கடலூர், ஆக. 31–
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் வடலூர் பணிமனையில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட். கடலூர் மண்டலத்திற்குட்பட்ட வடலூர் பணிமனையில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, வடலூர் பணிமனையில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்திட தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான பணியானையை அரசு போக்குவரத்து கழகம், கடலூர் மண்டல பொது மேலாளர் அவர்களிடம் வழங்கினார்.
வடலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தில் சிதம்பரம் – குறிஞ்சிப்பாடி (வழி- கொத்தவாச்சோி, சாத்தப்பாடி) வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை மற்றும் சிதம்பரம் – திருப்பதி வழித்தடத்தில் மற்றொரு புதிய பேருந்து சேவையையும் என இரண்டு புதிய அரசு பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
வடலூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு வசதிகள் நிதியின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மேலும், வடலூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.110 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவர் மற்றும் பேருந்து ஓடுபாதை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிமிடெட், கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.