செய்திகள்

பொள்ளாச்சி தீர்ப்பைப் போல கொடநாடு வழக்கிலும் விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை

Makkal Kural Official

ஸ்டாலின் உறுதி

ஊட்டி, மே 14–

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு போல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்றைய தினம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குச் சென்றார்.

இன்று அவர் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில் விவரம் வருமாறு:–

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே நான் தெளிவாக கூறி இருந்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக, யார் குற்றவாளியோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தாலும் சரி, எவ்வளவோ பெரிய செல்வாக்கு பெற்று இருந்தாலும் சரி, நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னேன். அது நடந்திருக்கிறது.

கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசும் போது, இந்த (அண்ணா தி.மு.க.,) ஆட்சியின் அவல ஆட்சிக்கு, பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று கூறி இருந்தேன். அதான் நடந்திருக்கு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கும் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் உரிய தண்டனை வழங்கப்படும். ஆனால், உடனே எடப்பாடி வந்து, நான் தான் இதற்கு காரணம் என்று சொல்லிட்டு இருக்கிறார்.

பொய், பித்தலாட்டம்

அதேமாதிரி அமித்ஷாவை பார்த்து வந்தார். ஏன் வந்து பார்த்தார் என்று நாட்டுக்கே தெரியும். 100 நாள் வேலை திட்டத்துக்கு நான் தான் நிதி கொடுக்கச் சொல்லிட்டு வந்தேன், மெட்ரோ திட்டத்துக்கு நான்தான் நிதி கொடுக்கச் சொல்லிட்டு வந்தேன்னு சொல்லிட்டு இருக்கிறார்.

பொய்யை, பித்தலாட்டத்தை சொல்வது தான் எடப்பாடி பழனிசாமியின் வேலையாக இருக்கிறது. இது மக்களுக்கு நல்லாவே தெரியும் என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தில் ராணுவ வீரர்களா சென்று சண்டை போட்டனர் என்று அண்ணா தி.மு.க. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர் (செல்லூர் ராஜூ) தெர்மாகோல் விட்டது பற்றி நாட்டுக்கே தெரியும். எனவே அவர் கூறியதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றார்.

தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எப்படி இருந்தது என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, அது மிகவும் சிறப்பாக இருந்தது, அதற்காக தான் நான் வந்து ஆதரவு தெரிவித்து, எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தினோம்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *