சிறுகதை

பொல்லாத ஆசை – ராஜா செல்லமுத்து

ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் காதம்பரிக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது…

யாரிடமாவது சொன்னால் கேவலமாகவும் அதே நேரத்தில் கேலியும் செய்வார்கள் என்று மனதுக்குள் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தாள்.

இந்த வயசுல இது தேவையா? என்பார்கள் என்றும்… தன்னை ஏளனமாக பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும் எப்போது ஒரு மிடுக்கு நடையோடு நடந்து கொண்டிருப்பாள்.

25 வயதில் கணவனை விபத்தில் பலி கொடுத்து விட்டு.. இரண்டு பிள்ளைகளை வளர்த்து.. ஆளாக்கி படிக்க வைத்து.. திருமணமும் செய்து வைத்து.. எல்லாமே தனி ஒரு ஆளாகி நின்று செய்தாள்.

ஆனால், இப்பொழுது வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யம் பிடிமானம் இல்லாமல்.. மனதுக்குள் கேள்விக்குறியோடு நின்று கொண்டிருக்கிறாள் காதம்பரி.

நெருங்கிய தோழியிடம் சொல்லும்போது.. நாங்கெல்லாம் இல்லையா..?. என்று சொன்னார்கள்.

ஆனால், தன் தேவை என்ன என்பது புரிந்து கொண்ட பிறகு கிண்டலாகப் பார்க்க ஆரம்பித்தாள்.. காதம்பரியின் தோழிகள்.

அதிலிருந்து அவளுடைய ஆசையை யாரிடமும் சொல்லாமல்… மனத்துக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொண்டாள்.

என்னமா ஆச்சு உனக்கு?.. என்று மகள்களின் நச்சரிப்பு தாங்க முடியாமல் ஒரு நாள் வாய்விட்டு அழுது சொல்லிவிட்டாள்.

இதைக் கேட்டவர்களின் சிரிப்பை அடக்க கொள்ள முடியாமல் சிரித்துக் காெண்டனர்.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? என்று…

அவளின் ஆசை வினோதமாக இருந்தது.

அன்று மூத்தவள் வீட்டிற்கு வந்தாள்.

வந்தவள் கொஞ்சம் ஹாலுக்கு வாம்மா என்றாள்.இவள் ஏன் நம்மைக் கூப்பிடுகிறாள் ? ஏதும் பீதியைக் கிளப்பி விடப் போகிறாளா? என்று பயந்தபடியே வந்தாள் ,காதம்பரி..

மருமகனை பார்த்தவுடன்… வாங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க.. என்று கூறியபடி சமையல் அறைக்குள் நுழைய முற்பட்டாள்…

ஏய்.. காதம்பரி நில்லு.. என்று ஒரு குரல் கேட்டது.. தன்னை யார் பெயர் வைத்துக் கூப்பிடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாள்.

தன் பேரன் நிகிலன் தான் காதம்பரி என்று தன் பெயர் சொல்லி கூப்பிட்டான் என்பதை உணர்ந்தாள்.

என்ன காதம்பரி அப்படி பார்க்கிற? உன்ன நான் தான் கூப்பிட்டேன் என்று கூறியவாறு அவள் அருகே வந்தான் நிகிலன்.

தன் பெயர் சொல்லிக் கூப்பிட்ட தன் பேரனை உச்சி முகர்ந்து வாரி அணைத்துக் கொண்டாள்.

போதும்டா செல்லம். இந்த ஜென்மத்திற்கு..என் பெயர கூப்பிட ஆளில்லயேன்னு நெனச்சு ஏங்கிட்டு இருந்தேன். இன்னைக்கு நீ என் பேர் சாெல்லி கூப்பிடும் பாேது அவ்வளவு சந்தாேஷம் என்று சொன்ன பாேது காதம்பரியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கும் அவள் மருமகன்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *