லா பாஸ், மார்ச் 4-
தெற்கு பொலிவியாவில் நெடுஞ்சாலையில் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில், பஸ் பள்ளதில் விழுந்ததில் 31 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிவியன் அல்டிப்லானோவில் உள்ள ஓருரோ மற்றும் ஹைலேண்ட் சுரங்க நகரமான பொட்டோசி ஆகியவற்றுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து மீது டிரக் ஒன்று மோதியது. இந்த மோதலில் பேருந்து சுமார் 500 மீட்டர் (1,640 அடி) பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
31 பேர் பலி
தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்ஸ், அவசர உதவி வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இந்த கோர விபத்தில் ஆண்கள், பெண்கள் என இறந்தவர்களின் எண்ணிக்கை 31 என்று உறுதிப்படுத்தினர். மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ் வெளியிட்ட இரங்கில் செய்தியில், “இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு காரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இந்த கடினமான நேரங்களை எதிர்கொள்ளத் தேவையான பலத்தை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு காரணமான டிரக் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிந்த வடு மறைவதற்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.