சிறுகதை

பொறுமை – ராஜா செல்லமுத்து

நான்கு புறமும் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்லும் சாலைகள் சந்திப்பு நிறுத்தத்தில் இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் வலது புறத்திலிருந்து இடது பக்கம் தான் செல்ல வேண்டும் இன்னொருவர் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் திரும்ப வேண்டும். இப்படி எதிரெதிர் திசையில் திரும்ப வேண்டி இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொண்டு நின்றார்கள்.

நான்தான் முதல்ல வந்தேன். நீ எப்படி வண்டியைத் திருப்பலாம்? என்று ஒரு வண்டிக்காரன் எகிற…

நான் தான் முதல்ல வந்தேன்; நீ எப்படி எப்படி ஓவர் டெக் செய்யலாம் ? என்று இன்னொருவன் சொல்ல… மாறி மாறிச் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

அந்த இடத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் இரண்டு பேரின் சண்டைகளைத் தீர்த்து வைப்பதற்கு அங்கு யாரும் வரவில்லை .

நான்கு பக்கமும் வாகனங்கள் நின்றிருந்தன. இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகளும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் காரசாரமான வார்த்தைகளைக் கேட்டு அருகில் இருப்பவர்கள் அவர்களை விலக்கி விடவும் நியாயம் சொல்லி சமாதானப்படுத்தவும் முடியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

நமக்கு எதுக்கு வம்பு? அவங்க எப்ப பைசல் பண்ணி முடிக்கிறாங்களோ அப்ப போகலாம் என்று இரண்டு பக்கமும் உள்ள வாகன ஓட்டிகள் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.

அந்த இடமே திகைத்து நின்றது.

ஒரு இருசக்கர வாகனத்தின் முன் கண்ணாடி சின்னதாக உடைந்திருப்பதை பார்த்த ஒரு வண்டிக்காரன் இதுக்கு நீ பணம் தராம போகக்கூடாது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

நீ செஞ்ச தப்புக்கு நான் எப்படி பழி ஏற்க முடியும். முடியாது என்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

ஒருவருக்கொருவர் பேசிப் பேசி கைகலப்பாகி விடுமோ? என்று நினைத்த வாகன ஓட்டிகள் இவர்கள் எப்போது சண்டை போடுவார்கள் ; அதைப் படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிரப்பலாம் என்று சில பேர் தங்களுடைய கைபேசியை எடுத்து அதிலுள்ள கேமராவை ஆன் செய்து தயாராக இருந்தார்கள்.

எப்படியும் இவர்கள் அடித்துக் கொள்வார்கள். வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த சில பேர் சண்டையை ஆவலாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான்கு பக்கமும் செல்லும் வண்டிகள் எல்லாம் ,அதே இடத்தில் நின்று நகராமல் இருந்தன.

இது எதுவுமே தெரியாமலிருந்த கோவில் பிள்ளை தன்னுடைய செக்யூரிட்டி வேலையை முடித்து விட்டு அந்த நான்கு சாலைகள் செல்லும் வழியாகத்தான் தினமும் வீடு செல்வது வழக்கம் .

சாதாரணமாக வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

என்ன இது? ரோட்டில எவ்வளவு கூட்டம் இருக்கு .ஏதும் பிரச்சனையோ? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கோவில் பிள்ளை போக்குவரத்து நெரிசலை கடந்து சென்ற போது தான் தெரிந்தது.

இது இரண்டு பேருக்குமான சண்டை. இதை யாரும் விலக்கி விடாமல் இருக்கிறார்கள் என்று நினைத்த கோயில் பிள்ளை அவர்கள் அருகே சென்றார்.

ஏப்பா, தம்பிகளா.. ஏன் இப்படி சண்டை போட்டு நிக்கிறீங்க? உங்களால முன்னாடி பின்னாடி சைடு எவ்வளவோ வண்டிக என்னென்னமோ வேலைக்கு செல்றவங்க. அத்தனை பேரும் காத்துட்டு இருக்காங்க.

சண்ட விட்டுட்டு வழிய விடுங்க. அவங்கவங்க வீட்டுக்கு போய்ச் சேரட்டும் என்று சொன்னார் பெரியவர் கோயில்பிள்ளை.

அதுவரையில் சண்டை போட்டுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பெரியவர் பேசியதை கேட்டு சமாதானம் அடைந்தார்கள்

இந்த மனித வாழ்க்கை ரொம்ப புனிதமானது தம்பி. ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்து அனுசரிச்சு உதவி செஞ்சு வாழ்க்கை நடத்துனோம்னா நம்ம வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இங்க நிக்கிற எல்லா வண்டிக்காரர்களும் நீங்க எப்ப சண்டை போடுவீங்க ; அதை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடலாம்னு நினைச்சுட்டு இருக்காங்க.

நீங்க ஏன் ஒருத்தர் ஒருத்தர் சண்டை போடுறீங்க. ஒரே மண்ணு ஒரே காத்து. ஒரே வாழ்க்கை. கொஞ்சம் பொறுமையா இருந்தீங்கன்னா எதை வேணும்னாலும் இங்க சாதிக்கலாம்.

உதாரணமா நீங்களே வண்டி எடுத்து இருந்தாலும்

சாரி… நான் தான் தவறு பண்ணிட்டேன். என்னைய மன்னிச்சிருங்க. அப்படின்னு கேட்டு பாருங்க.என்று கோயில் பிள்ளை சொல்ல

அதுவரையில் எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஒருவருக்கொருவர் சமாதானமாய் கை குலுக்கிச் சிரித்தார்கள்.

அதுவரையில் அடைந்து கிடந்த வாகனங்கள் எல்லாம் மடை திறந்த தண்ணீரைப் போல் சீறிப்பாய்ந்தன.

ஒரு இடத்தில் ஒரு பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டோம். ரொம்ப சந்தோசமா இருக்கு என்று நினைத்த கோயில் பிள்ளை தன் வழியில் நடந்து சென்று காெண்டிருந்தார்.

அடுத்த ஒரு முறை இப்படி வாகன ஓட்டிகளுக்குள் தகராறு வந்தால் இன்னொரு கோயில் பிள்ளை வருவாரா? என்பது சந்தேகமே.

இப்போதைக்கு அந்த நான்கு வழிச் சாலை வாகனங்கள் பரபரப்பாக சீராக ஓடிக் கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *