விலை உயர்ந்த பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனம் படுவேகமாக வளர்ந்திருந்தது. அதன் வளர்ச்சிக்கும் வருமானத்திற்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணமென்று முதலாளி ரொம்பவே பெருமைப்பட்டுக் கொள்வார். பணிபுரியும் ஊழியர்களை வேலைக்காரர்களாக நினைக்க மாட்டார். நிறுவனத்தின் பங்குதாரராகவே நடத்துவார்.
அவ்வளவு உயர்ந்து வளர்ந்த கம்பெனியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் பிடிக்காமல் இருந்தது. அடிக்கடி அந்த நிறுவனத்தில் சில பொருட்கள் திருடு போய்க் கொண்டிருந்தன. சிசிடிவி கேமராக்கள் ,பாதுகாவலர்கள் இருந்தும் கூட அந்தத் திருட்டு எப்படி போகிறது?
என்று யாருக்கும் தெரியவில்லை. இதைக் கேட்கவும் முதலாளிக்கு தயக்கமாக இருந்தது
இதை எப்படி கேட்பது? நிறுவன ஊழியர்களைத் தம் குடும்பம் போல் நடத்திக் கொண்டிருக்கும் முதலாளியால் திருடு போகும் பொருட்களைக் கேட்பது என்பது அவரால் முடியாத ஒன்றாக இருந்தது . ஆனால் நாளுக்கு நாள் திருட்டு வேலை அதிகமாகக் நடந்து கொண்டே இருந்தன . வேறு வழியில்லை கேட்டு விட வேண்டியதுதான் என்று ஒரு நாள் அத்தனை ஊழியர்களையும் கூப்பிட்டு
“யார் திருடுகிறார்கள் ? இதன் பின்னணி என்ன ?”
என்று விசாரித்தார். இதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை
‘ சரி இதை நாமே கண்டுபிடித்து விடலாம்’
என்று ஒவ்வொரு மனிதராகத் தனித்தனியாகக் கண்காணிக்க ஆரம்பித்தார் .அப்படி கண்காணிக்கும் போதும் யாரும் அகப்படவில்லை.
” சரி வேறு வழி இல்லை. நாமளே இவர்களைச் சோதனை செய்யலாம்”
என்று ஒவ்வொரு தனி நபர்களையும் கண்காணித்துக் கண்காணித்து அவர்களைப் பரிசோதனை செய்தார்.அப்போதும் யாரும் அகப்படவில்லை.
கடைசியாக அவருக்கு நெருக்கமான ஒருவரை மட்டும் விட்டு, விட்டு மற்றவர்களை எல்லாம் பரிசோதனை விசாரணை செய்தார். அவர்கள் எல்லாம் நிரபராதிகளாகவே இருந்தார்கள். கடைசியில் யாரை நம்பிக் கொண்டிருந்தாரோ அவரை மட்டும் தான் சோதனை செய்யவில்லை என்பது அவருக்குப் புரிந்தது.
ஆனால், இதுபற்றி எதுவும் சொல்லாமல் தன் மனதிலேயே வைத்துக் கொண்டவர், நிறுவனத்தில் திருடர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் தான் சரியான ஆள். நிறுவனத்தில் நடக்கும் திருட்டை, திருடர்களை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் “
என்று தான் நம்பிய ஒருவரையே திருடர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பின் தலைவராக நியமித்தார். இதுவரை திருடிக் கொண்டிருந்தவரையே திருட்டைக் கண்டுபிடிக்கும் பொறுப்புக்குத் தலைமையாக நியமித்தார் முதலாளி
வேறு வழியின்றி விழி பிதுங்கி நின்றார் அந்த நம்பிக்கையான திருட்டு மனிதர்.