செய்திகள்

பொறுப்பற்ற கருத்துகள் வெளியிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: வடகொரியா

பியாங்யாங், செப். 22–

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததில்லை என்றும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏழு மாத காலமாக பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு தரப்பிலும் சாமதானம் ஏற்படாத நிலையில், போரின் நேரடி மற்றும் பக்க விளைவுகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா, வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை வாங்குகிறது என்று முன்னதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

மில்லியன் கணக்கான ஆயுத தளவாடங்கள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வடகொரியா ஏற்றுமதி செய்திருக்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருந்தார். ஆனால், உக்ரைனில், வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆயுதங்களோ, தளவாடங்களோ உக்ரைனில் கைப்பற்றப்பட்டவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அச்சம் தேவையற்றது

இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவின் சந்தேகம் தேவையற்றது என வடகொரியா தெரிவித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சில வாரங்களுக்கு பிறகு பதிலளித்திருக்கும் வடகொரியா, “பிற விரோத சக்திகள், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய வதந்தியை பரப்புகின்றன என்று சொல்லி அமெரிக்காவுக்கு குட்டு வைத்துள்ளது.

“நாங்கள் இதற்கு முன்பும் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ததில்லை, இனியும் அந்நாட்டிற்கு ஆயுத ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிடவில்லை என்று வடகொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் எழுத்துபூர்வமான அறிக்கை அளித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை நாங்கள் எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ள வடகொரியா, இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதும் செய்யாததும் தனது உரிமை என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்றும் கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.