ஸ்டாலின் ‘டூவிட்’
சென்னை, ஜூன் 28-–
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவிப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:–-
ஜூன் 27-ம் தேதி (அதாவது நேற்று) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினம். தி.மு.க. அரசு அமைந்தபிறகு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, சந்தைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை, புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.