செய்திகள் நாடும் நடப்பும்

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கும் விவசாயிகளின் நலன் காக்க புறக்கணிப்பு ஏன்?


வை–மை வரும் நல்ல தலைமை – பாகம் – 7 : ஆர்.முத்துக்குமார்


தேர்தல் வந்து விட்டால் ஆட்சியில் அமர்ந்திருப்போர் மக்களுக்கு மனம் குளிர அறிவிப்பை தடாலடியாக அமுல்படுத்துவது வாடிக்கை! அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களில் வர இருக்கும் இச்சமயத்தில் 3 கோடி மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்துள்ளார் அதிபர் பைடன்.

20 ஆண்டுகளாக நிலுவையில் ஒருவரது கல்விக்கடன் அவரது ஏழ்மை காரணமாக கட்டப்படாது இருந்தால் அவை ரத்தாகிவிடும் என்று அறிவித்துள்ளார்.

40 வயதை தாண்டிய அதாவது கிட்டத்தட்ட 3 கோடி பேர்களுக்கு லாட்டரி அடித்தது போல் பழைய கடன் ரத்தாவது அவர்களின் வாக்கை பெறத்தான் என்பதை உலகிற்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இது உண்மையில் ஏழை குடும்பத்தாருக்கு மிகப்பெரிய உதவியாகத் தான் இருக்கும். வங்கிகளுக்கு வராக்கடன் சுமை ஒரு பக்கம் குறையும், வங்கிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

ஆனால் அமெரிக்க பொருளாதாரம் மக்களை செலவு செய்ய வைத்தே பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் பாணியை கடைப்பிடிப்பதால் கல்விக் கடன் பயனாளிகள் இனி மாதாந்திர கடன் வட்டி திருப்பி தரும் சுமை இல்லா நிலையில் வங்கிகளிடம் கிரெடிடட் கார்டுகளை கூடுதல் நிதி பெறும் வசதியுடன் பெற்று விடுவார்கள்.

கூடவே வீடு, கார் வாங்க கடன் தருவதிலும் சிக்கல்கள் இருக்காது.

ஆக ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி பைடன் கட்சிக்கு மகிழ்ச்சியான சமாச்சாரமாக இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக டிரம்ப் தரப்பில் மக்களிடம் பெற்ற வரியை தேர்தலில் வெற்றிப் பெற இப்படி அரசு முடிவு எடுப்பது தவறு என விமர்ச்சித்து எதிர்காலம். ஆனால் ரத்தை எதிர்க்க முடியாது!

இதே மாடல் மக்கள் நல கவர்ச்சித் திட்டங்கள் நமது ஆட்சியாளர்களாலும் வாரி வழங்கப்படுவதும் வாடிக்கை தான். பொருளாதார நிபுணர்கள் விரும்புவது ஏதேனும் ஒரு வகையில் அரசும் பயனடைய வேண்டும் என்பது தான்.

விவசாயிகள் கடன் ரத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், திமுக அறிவித்ததை திரும்பி பார்க்கும்போது பல லட்சம் கோடி கடன்கள் ரத்தானது உண்மை தான். ஆனால் பயன் அடைந்த ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடவில்லையே, காரணம் பெருவாரியான கடன் வசதி படைத்த கோடீஸ்வர விவசாயிகளுக்கு மட்டுமே பெறப்பட்டு இருந்ததால், அவர்கள் மேலும் பணக்காரர்களாக உயர முடிந்தது.

ஏழை விவசாயிகளோ மீண்டும், மீண்டும் வங்கிகளிடம் கடன் பெற முடியாத கடனாளிகள் என்ற முத்திரையுடன் கோடீஸ்வர விவசாயிகளிடமும், அதிக கடன் வட்டியை பெறும் தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கித் தவிப்பது தான் நாடெங்கும் நிலவும் அவலமாகும்.

தொழில்துறை, ஐடி துறை போன்ற துறைகளில் கடன் தரப்படும்போது காட்டப்படும் சலுகைகள், சிறு–குறு தொழில்முனைவோருக்கு தரப்படும் நிதி உதவிகள் மற்றும் மானியங்கள் போன்று விவசாயிகளுக்கு தரப்பட்டு வந்தாலும், அந்த உதவிகள் மறைமுகமாக கோடீஸ்வர விவசாயிகளுக்கே பயன் தரும் ஒன்றாக இருக்கிறது.

நம் நாட்டில் விவசாயிகளுக்கு தரப்பட்ட உத்தரவாதங்கள் எல்லாக் கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருப்பது தான் உண்மை!

குறைந்தபட்ச ஆதார விலையை எல்லா விளைபொருட்களுக்கும் சட்டப்பூர்வமாக கொண்டு வருவோம், விவசாயத்தை அதிகரிக்க வழிகள் காண்போம், அதற்கு குறிப்பாக தேசிய நதிகளை இணைப்போம் என்று கூறுவார்கள்.

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என 2014 தேர்தலில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. சுவாமிநாதனின் பரிந்துரைகளில் முக்கியமானது, அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்திச் செலவுக்கு மேல் 50% லாபம்கிடைக்கும் வகையில் (சி2 50%) விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்பது.

எந்தத் தொழில் செய்பவர்களும் குறைந்தபட்ச லாபத்தை எதிர்பார்ப்பது இயல்பானது.

எனவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு 50% லாபத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்பது மிகவும் நியாயமான, நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைதான். அரசு இப்போது 23 வகையான வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலையை அறிவிக்கிறது. ஆனால், அதற்கு எந்தச் சட்ட உத்தரவாதமும் இல்லை.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பெரும்பகுதி மக்களுக்கு விரோதமான சட்டங்களை முறையான விவாதங்களின்றி அவசர அவசரமாக நிறைவேற்றிய ஆட்சியாளர்கள், நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண் துறை சார்ந்த இந்தச் சட்டத்தை இயற்றுவதற்குக் கடுகளவு முயற்சிகூட எடுக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் கடன் ரத்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. மேலும் மாணவர்களுக்கும் கடன் சுமை ஏதும் குறைக்க வழி காணப்படவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.14.68 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் இந்தச் செயல்பாடுகளால் 2014-–2022 காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயுள்ளனர். மொத்த விவசாயிகளில் 90% பேர் சிறு–-குறு விவசாயிகளாக உள்ள நாட்டில், கடன் தள்ளுபடி கோரிக்கையை அநியாயமானது என்று சொல்ல முடியுமா? இப்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக – வறட்சி, அபரிமிதமான மழை, வெள்ளம், கடும் பனி காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். அத்துடன், வன விலங்குகளை -மனித எதிர்கொள்ளல் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் அழிக்கப்படுவது அன்றாடச் செய்தியாகி விட்டது. இதனால், விவசாயிகள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜிஎஸ்டி வரி விதித்து, விலைவாசி உயர்வுக்கு அரசே காரணமாக இருக்கிறது. வேளாண் விளைபொருள்கள், வேளாண் இயந்திரங்கள், வேளாண் இடுபொருள்களுக்கு என எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் விவசாய உற்பத்திச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை ஈடு செய்யும் வகையில், விவசாயிகளுக்கு வருமானமும் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துகிற ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

இன்றைய கட்டத்தில் முதல் முறை வாக்களிக்க வரும் இளைஞர்கள் முதல் எல்லா தரப்பு வாக்காளர்களும் விரும்புவது புதிதுபுதிதாய் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு, சந்தை உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

நமது அரசியல் சாசன சட்டம் ஜனநாயகத்தையும், சமத்துவம், சகோதரத்துவத்தையும், மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளை உறுதி செய்து சமுதாயத்தை பாதுகாத்து உறுதியாக இருக்க உத்தரவாதம் தருகிறது.

இவற்றுடன் அவை யாவும் விவசாயிகள் மற்றும் விவசாயம் புரட்சி காண அன்றாட கண்காணிப்பும், வளர அரவணைப்பும் தேவைப்படுவதை உறுதி செய்யும் நெறிமுறைகளுக்கும் சட்ட நியதிகள் அமுலில் இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *