செய்திகள் நாடும் நடப்பும்

பொருளாதார வல்லரசாக இந்தியா உயர உள்நாட்டிலேயே தயாரிப்பு சாதனைகள் பாரீர்!


ஆர். முத்துக்குமார்


இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருவதை உலக நாடுகள் உணர ஆரம்பித்து விட்டது. அதன் பயன்களை இந்தியர்களும் அனுபவிக்கும் நல்ல நேரமும் நெருங்கி விட்டது.

பிரதமர் மோடி 75வது சுதந்திர உரையில் தந்த 5 உறுதிமொழிகள்:–

2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். காலனியாதிக்க மனோபாவத்தை தூக்கி எறிவது; நமது பாரம்பரிய முறைகளை மீட்டு எடுப்பது, தேச ஒற்றுமை, கடமை உணர்வு ஆகியவற்றைச் சுட்டிக் காட்டினார்.

இவையெல்லாம் செயலில் வர, நமது பொருளாதாரம் முன்னேற வேண்டும் அல்லவா ? அதற்கும் அவர் பல செயல் திட்டங்களையும் அறிவித்தது நினைவிருக்கலாம். அதில் உள் நாட்டில் தயாரிப்பு என்பது மிக முக்கியமான வரலாற்று சிறப்பு கொண்டதாகும்.

போர் ஹெலிகாப்டர்கள்

பல்வேறு துறைகளில், ‘இந்தியாவிலேயே தயாரிப்பு’ சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனம் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை உருவாக்கி, இந்திய ராணுவத்திடம் 10 நாட்களுக்கு முன்பு ஒப்படைத்து விட்டது. இது ஏவுகணை தாக்குதலை தடுத்து, எதிர் தாக்குதல் செய்யும் திறன் கொண்டிருப்பது இதன் வல்லமை ஆகும்.

நமது எல்லைப் பகுதிகள் கடுமையான மலை பகுதிகளாகவே இருப்பதை அறிவோம். இது இலகு ரக ஹெலிகாப்டர் என்பதால் எளிதில் வரும் ஏவுகணை தாக்குதலை முறியடிக்க வளைந்து பறந்து செயல்பட முடியும்.

வெறும் 6 டன் எடை தான் என்றாலும் ராட்சத தாக்குதல் சக்தி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தாக்கப்பட்டாலோ விபத்தினால் சேதமடைந்தாலும் கீழே விழுந்தாலும் மிகக்குறைவான சேதத்தையே நிலத்தில் ஏற்படுத்துமாம்.

மணிக்கு 768 கி.மீ. வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. தேடுதல் பணிகள், மீட்புப் பணிகள், பீரங்கி அழித்தல், தரைப் படையை தாக்கிடும் நவீன தொழில்நுட்பங்கள் எனப் பலர் முக்கிய போர் கால பயன்பாடுகள் கொண்டுள்ளது.

ஏற்றுமதிக்கும் வாய்ப்பு

குறிப்பாக வானில் மிக மெதுவாக பறக்கும் டிரோன்களை களையெடுக்கும் வல்லமையும் கொண்டிருக்கிறது. இது நாமே வடிவமைத்து தயாரித்தது. வெளிநாட்டு உதவி ஏதுமின்றி உருவானதால் எந்த நிலையிலும் வேறு நாட்டிற்கு எந்த வித தகவலையும் அனுப்பாது என்பது உறுதி.

எல்லைப்புறத்தில் எதிரிகளின் ராடார் கருவிகளை சிறை செய்து அதன் கண்களில் படாமல் தப்பிக்கும் வல்லமை இதற்கு உண்டு! ஆகையால் எல்லாமே நாமே வடிவமைத்து பொருத்தி உருவாக்கி இருப்பதால் வேறு நாட்டினரால் வேவு பார்க்க முடியாது. அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்கும் வல்லமையும் இதற்கு இருக்கிறது.

சரி, இது ராணுவ வலிமைக்கு உதவும். ஆனால் நமது பொருளாதாரம் மேம்பட என்ன வசதி கிடைக்கும்? உள்ளூர் தயாரிப்பு என்றாலே நாம் மிகக் குறைந்த விலையில் செய்து முடித்து விடுகிறோம். மேலும் நமக்குத் தேவைப்படும் எண்ணிக்கையை தயாரித்து விட்டு இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் நமக்கு காத்திருக்கிறது.

மின்னல் வேக ஒப்புதல், அதாவது ‘Gati Sakti’ என்ற பிரதமர் மோடியின் திட்டத்திற்கு, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ் 16 அமைச்சரவையின் ஒப்புதல்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும் திட்டம் அது!

195 புதிய திட்டங்கள்

அதன் கீழ் பல்வேறு கட்டுமான திட்டங்கள் உருவாகி கொண்டும் இருக்கிறது. அதன் கீழ் தான், உலகப் புகழ் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வெளியீடான ஆப்பிள் 14 மொபைல் போன்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கும் கொண்டு வந்து விட்டது!

இதேபோல் மேலும் 195 திட்டங்கள் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதில் சாலை போடுதல், விமான தளங்களை உருவாக்குதலும் உண்டு. சீனா சாலை போடுதலில் கடந்த 20 ஆண்டுகளாக சாதித்து வருகின்றனர். அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தியில்லா தொலைத் தொடர்பில் சாதித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதாரம் புதிய உச்சத்தை தொட இவை எல்லாம் உதவியது.

நாமும் பல்வேறு துறைகளில் பீடு நடை போட்டு புதிய சிகரங்களைத் தொட வேகமாகவே நடைபோடத் தொடங்கி விட்டோம். பொருளாதார வளர்ச்சியில் தொடரும் அறிகுறிகள் தெரிகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *