நாடும் நடப்பும்

பொருளாதார சரிவு, மத்திய அமைச்சர் எச்சரிக்கை


ஆர். முத்துக்குமார்


உலக நாடுகள் எல்லாம் பொருளாதார சரிவை சந்தித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்தியா மூன்று கொரோனா பெரும் தொற்று அலைகளை சமாளித்ததுடன் பொருளாதார வீழ்ச்சிகளில் இருந்தும் தப்பித்து விட்டது.

இதை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டியே ஆகவேண்டும்.

என்றாலும் பல்வேறு மானியங்கள், வரிச் சலுகைகள், பண உதவிகள், ரேஷனில் இலவச உணவு பண்டங்கள் எல்லாம் வழங்கியதே, அதற்காக நாம் செய்த நிதி ஒதுக்கீட்டை சமாளிக்க நிதி அமைச்சருக்கு வழியிருக்கிறதா?

அது இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க இருக்கும் மத்திய பட்ஜெட்டில் தெரிய வரும். இந்நிலையில் நாக்பூரில் துவங்கிய ஜி20 உள்கட்டமைப்பு பணிக் குழுவின் கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயன் ரானே பேசும்போது குறிப்பிட்ட ஒன்று, ‘தற்போது வளர்ந்த நாடுகள் பொருளாதார பெருமந்தத்தை சந்தித்துக் கொண்டு இருக்கையில் இந்தியா இதுவரை தப்பித்து விட்டாலும், ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிலும் பொருளாதார சரிவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது’ என்று எச்சரித்துள்ளார்.

இது நம் தேசத்தின் ஏழை எளியோரை பாதிக்காத வகையில் நிலைமையை சமாளிக்க பிரதமர் மோடி விடிய விடிய சந்தித்துக் கொண்டு தான் இருப்பார்.

பொருளாதார ஸ்திரத் தன்மையில் சீனா, அமெரிக்கா போன்ற வலுவான பொருளதாரங்களை விட இந்தியா சமீபமாக சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆறு மாதங்களாக கூறி வருகிறார்.

இப்படி இரு மத்திய அமைச்சர்கள் எதிரும் புதிருமாக பொருளாதார நிலையை பற்றி பேசி வருவது நமக்கு சற்றே பயத்தை கொடுக்கிறது அல்லவா?!

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கையிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவு நம் மண்ணிலும் வந்தால் சமானியனின் நிலை என்னவாகும்?

மானியங்கள், இலவசங்கள் எல்லாவற்றையும் வழங்கித் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் உயிர் ஆதாரமாக இருந்து பாதுகாக்கப்பட்டனர். அந்த நிதிச்சுமையுடன் பொருளாதார சரிவு வரும் நிலையில் உணவு பாதுகாப்பு சாமானியனுக்கு உறுதி செய்யப்பட்டால் நல்லது.

அதில் ஏற்பட இருக்கும் சிக்கல்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் சமர்பிக்கும் பட்ஜெட்டில் விடை தருவாரா? உண்மையான பொருளாதார நிலையை கணக்கிட்டு எழ இருக்கும் சவால்களை சமாளிக்க வலு கொண்ட பட்ஜெட்டை அறிவிப்பாரா?

நடைபெற இருக்கும் ஜி20 நாடுகளின் கூட்டங்களில், நகரங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவது எப்படி? நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதி ஆதாரம், எதிர்கால சவால்களை சமாளிக்க முதலீடுகள் என பலவற்றைப் பற்றி பேசுவார்கள், அத்துடன் நம் தரப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் முன்னணி பொருளாதாரங்கள் இச்சிக்கலில் இருந்து தப்பிக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்பது தான்.

சீனாவில் பொருளாதார சரிவு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி வந்தாலும் பசியின்மை பட்டியலில் முதலில் அல்லவா இருக்கிறது. அதாவது அந்நாட்டில் ஒருவருக்கு கூட உணவு இல்லை என்ற நிலை கிடையாது.

உலக பசி பட்டினி பட்டியலில் உள்ள 121 நாடுகளில் 99–வது இடத்தில் பாகிஸ்தானும், 64–வது இடத்தில் இலங்கையும் இருக்கிறது.

நாம் அப்பட்டியலில் 107–வது இடத்தில் பின்தங்கி இருக்கிறோம். ஒருவேளை நாம் சமாளிக்க வேண்டிய சவால் மிகப்பெரிய ஜனத்தொகை என நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொண்டாலும் சீனா, அமெரிக்காவில் உணவுக்கு வழியே இல்லா தனிமனிதன் யாருமில்லை என்பது எப்படி சாத்தியம்? என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

நமது பொருளாதாரம் சற்நே நடுக்கம் கண்டால் ஏழை சாமானியனை எப்படி நிமிர்ந்து நடைபோட வைக்க முடியும்.

இந்நிலை வரும் என்று மத்திய அமைச்சரே அச்சம் தெரிவித்துள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் தீர்வு காண புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அதுபற்றி சமர்பிக்க இருக்கும் நிதி நிலை அறிக்கை என்ன சொல்கிறது என்பதை காத்திருந்து தெரிந்த பிறகே சாமானியனுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *