ஆர்.முத்துக்குமார்
உலக விவகாரங்கள் பலமுறை நமக்கு பாதகமான சிக்கல்களை ஏற்படுத்தியது, ஆனால் ஒரு சில சமயம் நமக்கு புதிய வளர்ச்சிக்கான பாதையாகவும் அமைந்துள்ளது.
சமீபமாக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் கப்பல் பழுது பார்ப்புக்கு இந்தியாவை தேர்வு செய்து வருவது நமக்கு அந்நிய செலாவணி வரத்தை அதிகரித்து வளம் தர ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீன தளமாகும். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்துக்கு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிக்காக வந்தது.
கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையில் உலகின் வலிமை மிகுந்த நாடாக சீனா உருவெடுத்து வரும் நிலையில் சீனாவின் அண்டை நாடான இந்தியாவுக்கு அமெரிக்க கப்பல் பழுது பார்ப்புப் பணிக்காக வந்தது பெரும் கவனம் ஈர்த்தது.இது போன்ற ஒரு சூழ்நிலை உருவாக என்ன காரணம்?
இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளை, ஏவுகணைத் தாக்குதல், டிரோன் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிற நிலையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இப்பகுதியில் கூடுதல் கப்பல்களை ரோந்து பணிக்கு கொண்டு வந்தபடி உள்ளன.
இந்தக் கப்பல்களில் பழுது ஏற்பட்டால் சொந்த நாட்டுக்குச் சென்று பழுது பார்ப்பது என்பது நேர விரயம் மட்டுமல்ல செலவு மிகுந்ததும் கூட. இதே பணியை இந்தியாவில் மேற்கொள்வது என்பது பல விதங்களில் வசதியானது. செலவும் குறைவு. இதனால் அந்நாடுகள் தங்கள் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிக்கு இந்தியாவை தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளை நமது தேவைகளுக்கு சார்ந்து இருந்த நிலை மெல்ல மாறி அவர்களுக்கு நமது சேவைகள் தேவைப்பட்டு நாடி வருவது இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில் உலகம் வியந்து பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அம்சம் என்பது தான் உண்மை.
கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா சொந்தமாக தடுப்பூசி உருவாக்கி அத்தனை கோடி மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. வளர்ந்த நாடுகள் மட்டுமே விண்வெளித் துறையில் கோலோச்சி வந்த நிலையில் இந்தியா மிகக்குறைந்த செலவில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.
அந்த வரிசையில் தற்போது கப்பல் துறை சார்ந்து இந்தியா உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. இதன் வழியே தமிழ்நாடும் முக்கியத்துவம் பெறுகிறது.இந்த வளர்ச்சிகள் உலக அரசியல் சதுரங்கத்தில் நாம் மறைமுக தாக்குதல்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
இப்படி அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது போர் கப்பல்களை பழுது பார்த்து கொள்ள இந்திய எல்லை பகுதிக்கு அனுப்பிய பிறகு அதை தென்சீன கடலுக்கு மிக அருகாமையில் செயல்பட வாய்ப்பு வந்து விடுவதால், என்றேனும் சீனாவுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்பட வழியிருக்கிறது. அச்சமயத்தில் ரஷ்யாவும் சீனாவுடன் கைகோர்த்து அமெரிக்க ஏகாதிபத்தியம் சீன கடல் பகுதிகளில் வராமல் இருக்க நமக்கு ஆலோசனை வழங்கும் நிலை உருவாகலாம்.
ஆக போர் கப்பல்களை பழுது பார்த்த பிறகு அவை எங்கே எப்போது சென்று விடும், விட வேண்டும் என்பன பற்றிய விழிப்புணர்வும் அதை உறுதி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பும் நமக்கு இருப்பதை மறந்து விடக்கூடாது.