சிறுகதை

பொய் சாட்சி சொல்லாதே | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 10

–––––––––––––––––––––––––––––––––

கண்டொன்று சொல்லேல்

(விளக்கம்: கண்ணாற் கண்டதற்கு மாறாகப் பொய் சாட்சி சொல்லாதே)

 

 

டேவிட் உண்மையை சொல்லு இதை யார் செய்தது என்று ஆசிரியை மஞ்சுளா கேட்டார்.

டீச்சர் ….எனக்கு தெரியாது டீச்சர்.

டே ….உண்மையை சொல்லு. பொய் சொல்லக்கூடாது. நீ தானே இதை செய்தாய் என்று மீண்டும் மீண்டும் டேவிட்டை கேட்டார் ஆசிரியை.

டீச்சர் சதீஷ் தான் என்று டேவிட் கூறினான்.

நான் இல்லை டீச்சர் டேவிட் பொய் சொல்றான்.

கண்ணன் தான் டீச்சர் அதை செய்தான். நான் அவனை செய்யாதே என்று தடுத்தேன். அவன் என் பேச்சை கேட்காமல் செய்துவிட்டு என் மீது வீண் பழி போடுகிறான் என்று சதீஷ் கூறினான்.

ஆசிரியை மஞ்சுளாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு ‘பி’ பிரிவில் ஆசிரியை மஞ்சுளா வகுப்பு ஆசிரியர்.

அவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் போதித்து வந்தார்.

ஆனால் வகுப்பறையில் உள்ள ஒரு சில மாணவர்கள் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டனர்.

அவர்களை அவ்வப்போது ஆசிரியை மஞ்சுளா கண்டித்தும் தண்டித்தும் வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து மறுநாள் திங்கள் கிழமை காலையில் ஆசிரியை மஞ்சுளா வகுப்பறைக்குள் வந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த டேபிள்கள் உடைந்து கிடந்தது.

உடனே பள்ளி காவலாளியை அழைத்த ஆசிரியை அவரிடம் விளக்கம் கேட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை வகுப்பறையின் கதவை மூடும் போதே அந்த டேபிள்கள் உடைந்து கிடந்ததாக கூறினார்.

அதனால் அந்த டேபிளை அன்று மாலை வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் யாரோ உடைத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் ஏற்பட்டது.

உடனே மாணவர்கள் ஒவ்வொருவராக விசாரித்தார்.

ஆனால் மாணவர்கள் பலர் தங்கள் வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி விட்டதாகவும் அதனால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

மாணவன் சதீஷ், ‘‘டீச்சர் கண்ணன் தான் டேபிளை உடைத்தான்’’ என்று கூறினான்.

உடனே கண்ணன், டே … சதீஷ் பொய் சொல்லாதே.

டீச்சர் நான் டேபிளை உடைக்கவே இல்லை. சதீஷ் தான் டேபிளை உடைத்தான். டேவிட்டும் அதை பார்த்தான். அவனிடமே கேளுங்கள் என்று கூறினான்.

உடனே ஆசிரியை மஞ்சுளா, டேவிட்டை அழைத்து கேட்டார்.

டேவிட், டீச்சர் அது வந்து என்று இழுத்தான். அப்போது, கண்ணன் டேவிட்டை பார்த்து கையை நீட்டி முறைத்தான்.

உடனே டேவிட், டீச்சர் சதீஷ் தான் டேபிளை உடைத்தான் என்று கூறினான்.

ஆசிரியை மஞ்சுளாவுக்கு சந்தேகம் வந்தது.

ஏனென்றால் மாணவன் சதீஷ் மிகவும் அமைதியானவன். நன்றாக படிக்கக்கூடியவன்.

கண்ணனுக்கு படிப்பே வராது. வகுப்பில் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொள்வான்.

அதனால் அவன் தான் டேபிளை உடைத்திருக்க வேண்டும்.

ஆனால் மாணவன் சதீஷ் டேபிளை உடைத்ததை தான் நேரில் பார்த்தாக டேவிட் கூறினான்.

அதனால் அவனிடம் மீண்டும் விசாரித்தார் ஆசிரியை.

அப்போது அவன் சதீஷ் தான் டேபிளை உடைத்ததாகவும் அதை தான் நேரில் பார்த்தாகவும் கூறினார்.

இதை மறுத்த சதீஷ், டேவிட் பொய் சொல்வதாக கூறினான்.

டேவிட் ஏன்டா பொய் சொல்ற. நீயும் என்கூட தான் நின்னுக்கிட்டு இருந்த. அந்த கண்ணன் தானே டேபிளை உடைத்தான்.

இப்ப என்னடானா நான் உடைச்சேன்னு பொய் சொல்ற.

பொய் சொல்லாதடா. தயவு செய்து உண்மை சொல்லுடா என்றான்.

ஆசிரியை மஞ்சுளா இந்த விஷயத்தை தலைமை ஆசிரியர் ராஜாவிடம் கொண்டு சென்றார்.

தலைமை ஆசிரியர் ராஜா மாணவர்கள் டேவிட், சதீஷ், கண்ணன் ஆகியோரை தனித்தனியாக விசாரித்தார்.

அப்போது சதீஷ் தான் டேபிளை உடைக்கவில்லை என்று கண்ணன் உடைத்ததை தான் பார்த்தாகவும் கூறினான். டேவிட் அவனுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுவதாக கூறினான்.

கண்ணனிடம் விசாரித்தார். அவன் தான் உடைக்க வில்லை. சதீஷ் தான் உடைத்தான் .அதை டேவிட் பார்த்தான் என்று கூறினான்.

டேவிட்டை அழைத்து விசாரித்தார் தலைமை ஆசிரியர் ராஜா.

டேவிட் அப்போது, சதீஷ் தான் டேபிளை உடைத்ததாகவும் கண்ணன் டேபிளை உடைக்க வில்லை என்று கூறினான்.

உடனே தலைமை ஆசிரியர் கையில் கம்பை வைத்து கொண்டு, நீ கண்ணால் பார்த்ததே தைரியமாக சொல்லு. பார்த்ததை விடுத்து பொய்யான தகவலை கூறாதே என்று கூறினார்.

தலைமை ஆசிரியர் கையில் கம்பு இருப்பதை பார்த்ததும் டேவிட்டுக்கு பயம் வர தொடங்கியது.

இல்ல சார் அது வந்து…. அது வந்து… என்று இழுத்தான்.

டே நீ இப்ப உண்மையை சொல்லப் போறாயா…. இல்லை உன்னை அடிக்கனும்மா என்று அதட்டினார் தலைமை ஆசிரியர்.

அந்த அதட்டலுக்கு பயந்த டேவிட், சார் கண்ணன் தான் டேபிளை உடைத்தான். சதீஷ் அதை தடுத்தான்.

நான் உண்மையை சொன்னால் என்னை அடிப்பதாக கண்ணன் மிரட்டினான். அதனால் தான் பொய் சொன்னேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டான் டேவிட்.

அப்போது தலைமை ஆசிரியர், நீ சொல்லும் பொய்யால் குற்றம் செய்தவன் தப்பி செல்லும் நிலையும் ஒரு அப்பாவி தண்டிக்கும் நிலை ஏற்பட தோன்றியது. நல்ல வேளையாக உண்மையை ஒப்புக்கொண்டாய். இனிமேல் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எப்பேற்பட்ட எதிர்ப்பு வந்தாலும் கண்ணால் கண்ட உண்மைக்கு மாறாக பொய் சொல்லக்கூடாது என்று அறிவுரை வழங்கி அவனை அனுப்பி வைத்தார்.

அதன்பின் கண்ணணை அழைத்த தலைமை ஆசிரியர் அவனுக்கு தண்டனை வழங்கி, இனி மேல் இது போல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

கண்ணால் கண்ட உண்மையை தைரியமாக எடுத்துச் சொன்ன சதீஷை தலைமை ஆசிரியர் ராஜா பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *