சிறுகதை

பொய் – ஆவடி ரமேஷ்குமார்

‘ ஆப்பிள் கிலோ நூறு ரூபாய்’ என்று சிலேட்டில் எழுதி தொங்கவிட்டிருந்ததை பார்த்த கதிர் அந்த தள்ளு வண்டியின் முன் போய் நின்றான். ஒரு பெரியவர் இரண்டு கிலோ ஆப்பிள்களை ரூபாய் நூற்றி அறுபதுக்கு வாங்கிக் கொண்டு வண்டியை விட்டு சிறிது நகர்ந்து நின்று யாருக்காகவோ காத்திருக்க ஆரம்பித்தார். ஒரு கிலோ ஆப்பிளை வாங்கிய கதிர் எண்பது ரூபாயை நீட்ட,

” நூறு ரூபாய் கொடுங்க சார். சிலேட்ல எழுதியிருக்கு பாருங்க” என்றார் கடைக்காரர்.”

அந்த பெரியவர்கிட்ட ரெண்டு கிலோவுக்கு நூற்றி அறுபது ரூபா தானே நீங்க வாங்கினீங்க”என்று கதிர் பதிலுக்கு சொல்ல,

” சார், அவர் அடுத்த தெருவிலிருக்கும் ஒரு முதியோர் இல்லத்திலிருந்து வர்றார்.

பாவம் சார் அவர்,கொழுப்பெடுத்த மகன் பொண்டாட்டி பேச்சைக்கேட்டுட்டு கை விட்டுட்டான். அவரை.எனக்கும் அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க. நான் அவங்களை என் வீட்ல வச்சு நல்லபடியா பா்த்திட்டிருக்கேன். அதான் சார் அவர் மேல இரக்கப்பட்டு அவருக்கு கிலோவுக்கு இருபது ரூபாயை தள்ளுபடி பண்ணினேன்.

நீங்க சின்ன வயசு.பிளீஸ் நூறு ரூபா கொடுங்க சார்” என்றார் கடைக்காரர்.”

சரி இந்தாங்க” என்று கொடுத்துவிட்டு நகர்ந்தான் கதிர். இதனை கவனித்துக்கொண்டிருந்த அந்த பெரியவர்,

வண்டிக்காரரை நெருங்கி,

” நான் முதியோர் இல்லத்திலிருந்து வந்ததா அந்தாளுகிட்ட ஏன் நீங்க பொய் சொன்னீங்க?” என்று கேட்டார்.

” மன்னிச்சுக்குங்க சார். அடிக்கடி என் கடைக்கு நீங்க வர்றதால உங்களுக்கு நான் கிலோவுக்கு இருபது ரூபா தள்ளுபடி தர்றது வழக்கம். இப்ப போனாரே அவர் பேரு கதிர். எனக்கு பழக்கமான ஒரு பெரியவரோட மகன் தான். கதிருக்கு என்னைத் தெரியாது.கதிர் அவன் அப்பா அம்மாவை ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்திட்டான். எல்லாம் அவன் தன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டுத்தான். அவனோட அப்பா என்கிட்டத்தான் வந்து அடிக்கடி பழங்கள் வாங்குவார். கதிரோட சுயநலத்தைப்பத்தி பல முறை ரொம்ப நொந்து புலம்பியிருக்கார். அதான் அந்த கோபத்துல அவன் புத்திக்கு உரைக்கட்டுமேனு உங்களைப்பத்தி மாத்தி தப்பா சொல்லிட்டேன்” சமாதானமானார் அந்த பெரியவர்.

அதே சமயம் கதிர் நேராக தன் வீட்டுக்கு போகாமல் முதியோர் இல்லத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தான்,தன் பெற்றோரை வீட்டுக்கு அழைத்துப்போக!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *