செய்திகள்

பொன்முடி விவகாரத்தில் ராகுல் காந்தி நடைமுறை பின்பற்றபடும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை, மார்ச் 12–

ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.

எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டமன்ற முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம் என்றார்.

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சிறப்பு கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை கடந்த டிசம்பர் 19ந் தேதி ரத்து செய்து, பொன்முடிக்கும், விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இதற்கிடையே பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொன்முடி தொடர்ந்து எம்எல்ஏவாக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பொன்முடி 2021ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *