செய்திகள்

பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் குட்டுபட்ட ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்

Makkal Kural Official

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 22–

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவியை, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அவர் உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார்.

ஆளுநரின் வன்மம்

வழக்கு ஒன்றில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்நிலையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்று முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு, ‘உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார்.

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை ஏதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன், சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆளுநர் பதவி விலக வேண்டும்

இந்நிலையில், ஆர்.என். ரவிக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் எப்படி கூற முடியும்? நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநரை எச்சரித்திருக்கிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *