செய்திகள்

பொன்னேரிக்கரை சாலை ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆய்வு

காஞ்சீபுரம், செப்.16-–

பொன்னேரிக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகில் சென்னை –பொன்னேரிக்கரை –காஞ்சீபுரம் சாலையில் ரூ.50.78 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலப்பணிக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயார் செய்யப்பட்டு 8.5.2017 அன்று தமிழக முதல்வரால் பாலப் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ரெயில்வே மேம்பாலத்தின் நீளம் 927.33 மீட்டர் மற்றும் அகலம் 4 வழிச்சாலை (17.2 மீட்டர்) அளவில் 66 தூண்களுடன் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நெடுஞ்சாலைத் துறையினரால் ரெயில்வே பகுதிக்கு அருகாமையிலுள்ள இரு தளங்களை தவிர மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிறகு அவர் கூறுகையில், ரெயில்வே மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2020-க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இப்பாலப்பணி முடிவடையும் சூழலில் காஞ்சீபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். வெகுநேரம் ரெயில்வே பாலத்தை கடக்க காத்திருக்கும் நேரம் குறையும். இப்பாலத்தினால் காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவர் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் செ.சரவணன், வட்டாட்சியர் பவானி, செங்கல்பட்டு உட்கோட்ட (திட்டப்பணிகள் II) உதவி கோட்ட பொறியாளர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *