ஜெய்பீம்.. ஜெய்பீம் என முழங்கிய ஆதரவாளர்கள்
சென்னை, ஜூலை 8–
நீதிமன்ற உத்தரவைப்படி ஆவடி அருகே பொத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் சந்தனப்பேழையில் வைத்து இன்று அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கிருந்த ஆதரவாளர்கள் ஜெய்பீம்… ஜெய்பீம் என முழக்கமிட்டனர்.
சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் குடியிருப்பு அருகே கடந்த 5ம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும், பெரம்பூர் பந்தன் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்று காலை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார். அவரது ஒன்றரை வயது குழந்தையை வாஞ்சையுடன் கொஞ்சினார்.
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சினை. நினைவு மண்டபம் கட்ட பிரச்சினை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் இருந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு மாதவரம், புழல், செங்குன்றம் வழியாக சுமார் 21 கி.மீ. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பொத்தூருக்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து 7 புத்த துறவிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். புத்தமத முறைப்படி 5 வாசனை திரவியங்களால் அவரது பூத உடலை தூய்மைப்படுத்தி இறுதிச்சடங்குகள் நடந்தன. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கதறி அழுதனர். ஆம்ஸ்ட்ராங்கின் ஒன்றரை வயது குழந்தை என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சடங்குகளை செய்தது. உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றபடி, சந்தனபேழையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் பங்கேற்றனர்.
அடக்கம் செய்யும் இடத்தில் ஆவடி கூடுதல் ஆணையர் தலைமையில் 300 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.