சிறுகதை

பொது நலன் கருதி – மு.வெ.சம்பத்

நல்லூர் என்ற கிராமம் சுமார் ஆயிரம் வீடுகள் கொண்டது. பல தரப்பட்ட மக்களும் மிகவும் நேசமாக வாழ்ந்தாலும் அடிப்படை பொருளாதார வசதிகள் மேம்பாடு இன்றி சில அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட சிரமப்பட்டனர். இந்த கிராமத்திற்கு இது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்த் தலைவர்கள் பக்கத்திலுள்ள டவுனில் சௌகரியமாக வாழ்ந்து வந்தார்கள். எப்போதாவது வந்து செல்வார்கள். அப்போது ஏதாவது சொன்னால் அரசாங்கத்திடம் சொல்லியுள்ளோம். சீக்கிரம் செய்வார்கள் என்று கூறிச் சென்று விடுவார்கள்.

எந்த அரசாங்க அதிகாரியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். உணவுப் பொருள் வழங்கும் ரேஷன் கடை மாதம் ஐந்து நாட்கள் திறந்தாலே அபூர்வம். அப்படி திறந்தாலும் அவர்கள் தரும் பொருட்கள் மற்றும் தான் வாங்க வேண்டும் என்பது இந்த கிராமத்து மக்கள் தலைவிதி.

வரும் ஊர்த்தலைவர் தேர்தலில் நமது கிராமத்திற்கு நல்லது செய்யக் கூடிய, நமது கிராமத்திலேயே தங்கியிருப்பவராகத் தேர்ந்தெடுப்பது எனக் கிராம மக்கள் முடிவு செய்தனர். தற்போதுள்ள தலைவர் தேர்தல் வருவதை முன்னிட்டு அடிக்கடி கிராமம் வந்து, நான் உங்களுக்கு இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று வாய்ப்பந்தல் போட்ட வண்ணம் வலம் வந்தார் கந்தசாமி. சில கிராம இளைஞர்களை அழைத்து உங்களுக்கு அரசாங்க வேலைக்குச் சொல்லியிருக்கிறேன். சீக்கிரம் வந்து விடும். தேர்தலில் என் பக்கம் நில்லுங்கள் என்று கூறினார். அவர்கள் ஏதும் சொல்லாதது கண்டு அவர்களை முறைத்து விட்டு அகன்றார்.

ஊர் மக்கள், ஊர்த் தலைவர் தேதி அறிவிக்கப்பட்டதும் தங்கள் சார்பில் நிற்பவர் பெயரை சற்று சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தனர். பழைய தலைவர் கந்தசாமி என்ன முயன்றும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியொரு வெறுப்பு மக்களுக்கு அவர் மேல்.

பழைய தலைவர்கந்தசாமி மறுபடியும் நிற்பதென முடிவு எடுத்து மனுவையும் தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கல் முடிவடையும் நாளன்று கிராம மக்கள் புடை சூழ வந்து தங்கசாமியை மனு தாக்கல் செய்ய வைத்தனர். இதை கேள்விப்பட்ட பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி கொந்தளித்து எனக்கு எப்படி ஜெயிக்க வேண்டுமெனத் தெரியும் என்று மமதையாகக் கூறினார்.

பழைய வீராப்புடன் வலம் வந்தார் பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி.அவர் தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

தங்கசாமி அமைதியாகவே இருந்தார். தான் ஜெயித்தோம் என்ற உணர்வில்லாமல் தலையில் வைக்கப்பட்டுள்ள சுமையை எண்ணி எப்படி சமாளிப்பதென யோசனையிலே இருந்தார்.

பொது இடத்தில் ஒரு திண்ணையில் தான் தினமும் வந்தமர்ந்து மக்களை சந்தித்தார் தங்கசாமி.

ஒரு அலுவலகம் போடக் கூட காசு இல்லாத பண்டாரத்தைப் போய் ஊர்த் தலைவனாகத் தேர்ந்தெடுத்த மக்களை என்ன செய்வது, அனுபவிக்கட்டும். தங்கசாமியைக் கண்டால் எந்த ஒரு அதிகாரியும் மதிக்க மாட்டார்கள் என்றார் பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி.

நாட்கள் உருள தங்கசாமி முதலில் ரேஷன் பொருட்கள் சரியாகக் கிடைக்க ஊர் மக்கள் சிலருடன் சென்று தகுந்த அதிகாரிகளைச் சந்தித்து ஏற்பாடு செய்தார்.

அடுத்ததாக, கிராம கைத்தொழிலை அபிவிருத்தி செய்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கு வகையாக இளைஞர்களின் அறிவுரைப்படி நடைமுறைப் படுத்தப்பட்டது.

தங்கசாமி நன்கு படித்த இளைஞர்களுக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்தார். கிராம வளர்ச்சியே தன் மூச்சென அடிக்கடி தங்கசாமி கூறுவார். பல தடவை ஊர் மக்களுடன் அதிகாரிகளை சந்தித்து ஊரில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார்.

அரசாங்கம் ஒதுக்கிய பணம் போதாமையால் போக, ஊர் மக்கள் பங்களிப்புடன் வேலைகள் இனிது முடிக்கப் பட்டன. பழைய ஊர்த் தலைவரிடம் உதவி கேட்க அவர் தனது பங்களிப்பை நிச்சயம் தருவதாகக் கூறி தள்ளிப் போட்டுக் கொண்டே போனார்.

இந்த கிராமத்து வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலர் தனது நண்பர்கள் மூலம் கிராமத்திற்கு சூரியஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை முதலில் தெரு விளக்கு எரிவதற்கு ஏற்பாடு செய்தனர்.

பின் அந்த கம்பெனிக் காரர்கள் மக்களை சந்தித்து ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சாரக் கருவினை பொருத்த ஏற்பாடு செய்தனர். சுமார் ஆறு மாத காலத்தில் பெரும்பாலான வீடுகள் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

அடுத்து தங்கசாமி மக்கள் எல்லோரையும் அழைத்து குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் தெருவில் ஒரு இடத்தில் போட வகை செய்தார்.அதில் தெருக்கள் சுத்தமாக காட்சி அளித்தது.

அடுத்தடுத்து கிராமம் பல வகையினில் முன்னேற்றம் கண்டது.

பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வழி கிடைத்தது.

மேற்படிப்புக்கு வேறு கல்லூரிக்குச் சென்ற போது இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் திட்டம் மூலம் பல பணிகள் நடந்து சிறந்த கிராமம் என விருதுகள் குவிந்தன. தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தனது திட்டங்களை இந்த கிராமத்தில் நிறைவேற்றினர்.

ஏதாவது அதிகாரி வந்தால் மட்டும் பழைய ஊர்த் தலைவர் முதலில் ஆஜராகி விடுவார். சில அதிகாரிகள் பழைய ஊர்த் தலைவரிடம் நீங்கள் ஏன் இதெல்லாம் செய்ய முன் வரவில்லை என்றதும் மழுப்பலாக பதில் கூறி விடுவார்.

நாளாக நாளாக பழைய ஊர்த் தலைவர் மனதில் ஒரு வித எண்ணம் ஓட்டம் ஏற்பட்டது. நாம் சற்று தொலைவில் உள்ள ஊருக்கு சென்று வாழ்ந்தால் நல்லதென நினைத்தார். அதற்கேற்ற ஏற்பாடுகளை யாருக்கும் தெரியாமல் செய்தார். பழைய ஊர்த் தலைவர் அடி மனதில் தங்கசாமி வளர்ச்சி ஒரு வெறுப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தது. தங்கசாமியை பழி வாங்க ஒரு திட்டம் மனதில் தீட்டினார் கந்தசாமி.

அன்று கிராம மக்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி தனது வீட்டுச் சாமான்களுடன் கிராமம் வந்து தனது பழைய வீட்டில் இறங்கியது கண்டு கிராம மக்கள் அவர் வீட்டின் முன் திரண்டனர்.

வந்த மக்களை கையெடுத்துக் கும்பிட்ட பழைய ஊர்த் தலைவர் நான் இனிமேல் உங்களுடன் தான் வாழப் போகிறேன் என்றார்.

அப்போது அங்கு வந்த தங்கசாமி இனிமேல் இவர் தான் ஊர்த் தலைவர் என்றார்.

மக்கள் எல்லோரும் திகைத்த நிற்க, பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி சொன்னார் : பொது நலன் கருதி தங்கசாமி செய்ததைக் கண்டு நான் இன்னும் பிரமிப்பாக உள்ளேன். அவர் மேல் எனக்கு பொறாமையே ஏற்பட்டது. சில நாட்கள் முன்பு என் வீட்டிற்கு வந்து எனது வேலை முடிந்து விட்டது. இனி நீங்கள் தான் ஊர்த் தலைவர் என்றார்.

கந்தசாமியின் பெருந்தன்மை என்னை மாற்றி விட்டது. இனிமேல் பொது நலனே எனது உயிர் மூச்சு என்றும் பொது நலன் பெருமையை தேடிக் கொடுக்கும் என்பதை அறிந்தேன் என்றார்.

இதிலும் தங்கசாமி தனது பொது நலனைக் காட்டியுள்ளார் என்றார்கள் மக்கள்.

பழைய ஊர்த் தலைவர் கந்தசாமி வெட்கி தலைகுனிந்து அசடு வழியச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *